பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 10 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (04) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஹட்டன் – புளியாவத்தை பிரதான வீதியின் பி.டபிள்யூ. பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புளியாவத்தை பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் நான்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த மற்றொரு முச்சக்கரவண்டிக்கு இடமளிக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக அதன் சாரதி தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளும் ஒரு மாணவனும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
