மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க 10 ஆண்டுகால திட்டம் அவசியம்

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க 10 ஆண்டுகால திட்டம் அவசியம்

மலையக மக்களின் காணி, வீடு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவதைப் போன்றே மலையக மக்களுக்கும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதனை இலக்காகக் கொண்டு 10 ஆண்டுகால விசேட திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் தரிசு நிலங்களை வெளியாருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முற்படுகின்ற நிலையில், தோட்டத் தொழிலில் ஈடுபடாத நிலையில் உள்ள மலையக இளைஞர்களுக்கு அவற்றை ஏன் வழங்கக்கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பழ உற்பத்தி, மலர் உற்பத்தி, வாழைப்பழச் செய்கை மற்றும் வாசனைத் திரவிய உற்பத்தி போன்ற கைத்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, குறித்த தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வீ. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

…………….

துணிவிருந்தால் உடனே தேர்தலை நடத்துங்கள்! சஜித் பகிரங்கச் சவால்

அரசுக்குத் துணிவிருந்தால் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.

முன்பு மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரைத் தெய்வங்களாகக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியினர் (மாலிமா), இன்று ஆடம் ஸ்மித் போன்ற பொருளியலாளர்களைத் தெய்வங்களாகக் கொண்டு, இடது பக்கம் சிக்னல் போட்டுவிட்டு வலது பக்கமாகச் செல்லும் புதிய தாராளவாதத்தின் முதன்மைத் தந்தைகளாக மாறிப்போயுள்ளனர் என்றும் அவர் சாடினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-

“வறுமையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, இன்றும் தவறான மற்றும் அறிவியல் அடிப்படையற்ற தரவுகளின் அடிப்படையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நுகர்வு, உற்பத்தி, சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி என அனைத்தும் இருக்க வேண்டும். ஆனால் அஸ்வெசும திட்டத்தில் நுகர்வு மட்டுமே காணப்படுகின்றது.

நாட்டின் வறுமைக் கோடு என்னவென்றே தெரியாமல் வரவு – செலவுத் திட்ட உரையை வாசிக்க அரசு தயாராகி வருகின்றது. நாட்டில் வறுமை 30% – 40% ஆகக் காணப்படும் வேளையில், 18–24 வயதுடைய இளைஞர்களிடையே மிக அதிகளவிலான வேலையின்மை நிலவுவது இலங்கையில்தான் எனச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுகின்றதே தவிர நாட்டைப் பற்றிச் சிந்திக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வரி வருமான இலக்குகளைக் குறிப்பிடும்போது, மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையைச் சுமத்தி அதனை அரசு மேலும் உயர்த்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் அளித்த பெற்றோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, இன்று எரிபொருள் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

மக்களின் பொருளாதார உரிமைகளை மீறிக்கொண்டே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்களை அரசு  கொண்டுவருகின்றது. அரசியல் ரீதியாகத் தமக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளது.

அரசு ஜனநாயகத்தை அழித்து மக்களாணையைக் காட்டிக்கொடுத்து வருகின்றது. எரிபொருள் வில உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தையும் கூட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுக்குத் துணிவிருந்தால் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன்.

இப்போதாவது வரிச்சுமைகளைக் குறைத்து மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதோடு, வேலையற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் 80 ஆயிரம்  பட்டதாரிகளுக்கும், ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” – என்றார்.

……………..

புசல்லாவை பகுதியில் நடந்த கொடூர சம்பவம்

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புஸல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

38 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பகுதியைச் சேர்ந்தவரும், குறித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள எதிர்பார்த்திருந்தவருமான ஆண் ஒருவர் வீட்டின் பின்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த பெண் முன்னர் திருமணமானவர் எனவும், முதல் கணவரிடமிருந்து பிரிந்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த நபருடன் மறுமணம் செய்துகொள்ளும் நோக்கில் இருவரும் அப்பெண்ணின் வீட்டிலேயே ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இக்கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் புசல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

…………….

கோட்டாபய ராஜபக்ச தொடர்பான வழக்கு தீர்ப்பு நவம்பர் 25

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கை மீதான தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் இணைந்தே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வெளிநாடு சென்ற பின்னர் கோட்டாபய ராஜபக்சஷ மீண்டும் இலங்கைக்குத் திரும்புவாரா என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எனினும், வெளிநாடு சென்ற பின்னர் அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்கான உரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பயணத் தடையை நீக்குவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான சட்ட ஏற்பாடுகள் இல்லாவிட்டால், அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி குறித்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவர் வெளிநாடு சென்ற பின்னர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதவான் பசன் அமரசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, பயணத் தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கை மீதான தீர்மானத்தை நவம்பர் 25ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

…………………

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

 

நாட்டின் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை 2026 நவம்பர் 5ஆம் திகதி மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை – செம்மஞ்சள் எச்சரிக்கை

மாத்தறை மாவட்டத்தின் கொடபொல, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, கொடகவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் நிலை – மஞ்சள் எச்சரிக்கை

பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

– பதுளை மாவட்டம்: வெலிமடை, பசறை, கந்தகெட்டிய, மீகஹகிவுல. ஹப்புத்தளை, எல்ல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களுக்கான எச்சரிக்கை ஒரு நிலை குறைக்கப்பட்டுள்ளது.

– கண்டி மாவட்டம்: யட்டிநுவர, மினிப்பே, ஹத்தரலியத்த, தும்பனே, தொலுவ, மெததும்பர. உடுநுவர மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களுக்கான எச்சரிக்கை ஒரு நிலை குறைக்கப்பட்டுள்ளது.

– கேகாலை மாவட்டம்: ரம்புக்கனை, ருவன்வெல்ல, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல.
– மாத்தளை மாவட்டம்: பல்லேபொல.

– நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வூட், வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை மேற்கு.

– இரத்தினபுரி மாவட்டம்: கஹவத்தை மற்றும் பெல்மதுளை ஆகிய பிரதேசங்கள் புதிதாக முதலாம் நிலை எச்சரிக்கைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவினால் நவம்பர் 4ஆம் திகதி மாலை 4 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் இதுவரை பதிவான மொத்த மழைவீழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மண்சரிவு அபாயங்கள் மதிப்பிடப்பட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்குத்தான மலைச் சரிவுகள், பள்ளத்தாக்குகள், மனித நடவடிக்கைகளால் வெட்டப்பட்ட மண் சரிவுகள் மற்றும் ஆபத்தான வீதிப் பகுதிகளுக்கு அருகில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், சுவர்களில் வெடிப்புகள் தோன்றுதல், நீரூற்றுகளில் திடீர் நீர்வரத்து ஏற்படுதல் அல்லது நீரூற்றுகள் தடைப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மண்சரிவுக்கு முந்தைய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

………………

குறைநிரப்பு மதிப்பீடு நாளை விவாதத்திற்கு

2026ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (04) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து 4,261 மில்லியன் ரூபாவை (ரூ.4,261,000,000.00) இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்காக இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் செயற்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய வகையிலான தொடர்ச்சியான பாதகமான காலநிலை நிலைமைகளால் ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை விமானப்படையில் ஆளில்லா விமானக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெறவுள்ளது. (அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில்) வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் இல்லை.

…………..

அடக்குமுறை சட்டமூலங்களுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (OCA) ஆகியவற்றை முழுமையாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, பாராளுமன்றத்துக்கு அருகில் இன்று (04) நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம், சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

…………….

 

 

Related Articles

Latest Articles