‘முகநூல் காதல்’ – திருமணம் செய்வதாகக்கூறி நடிகையிடம் ரூ, 65 லட்சம் மோசடி

முகநூல் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு திருமணம் செய்வதாக உறுதியளித்து அவரிடமிருந்து 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டும் இருப்பதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் மஹர சிறைச்சாலையின் அதிகாரிகளால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர், இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மினுவாங்கொடை, பட்டதுவன பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நடிகையொருவரிடமே பண மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தன்னை சமூக நல ஆர்வலர் எனக் கூறி இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நீதிமன்றத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 55 இலட்சம் ரூபாவும், கம்பஹா நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 49 இலட்சம் ரூபாவும் மோசடி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles