‘லிட்ரோ கேஸின்’ விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் பந்துல உறுதி

‘லிட்ரோ’ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

லாப் கேஸ் சிலிண்டர் விலைக்கு நிகராக லிட்ரோ கேஸ் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே லிட்ரோ கேஸ் பெறுவதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், விலை அதிகரிப்பு செய்தி வெளியான பின்னர் தட்டுப்பாடு மேலும் தீவிரமானது.

இந்த நிலையில், இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” அரசாங்கத்திற்குச் சொந்தமான லிட்ரோக நிறுவனத்தின் கேஸ் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பாரிய நட்டத்துடன், தற்போதுள்ள விலைக்கே மக்களுக்கு லிட்ரோ கேஸ் வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது.

அத்துடன், தட்டுப்பாடு இல்லாது தொடர்ந்தும் கேஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles