மகா சிவராத்திரியை முன்னிட்டு உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளை வழமைபோல இவ்வருடமும் நாடு முழுவதும் சைவக்கொடி வாரத்தையும், கொடி தினத்தையும் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் மஹா சிவராத்திரி தினமான நாளை 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலய முன்றலில் நடைபெற விருக்கின்றது.
உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையின் தலைவர் கலாநிதி சின்னத்துரை தனபாலா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார்.
சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வண. ஸ்ரீமத் அக்ஷராத்மானந்த மகாராஜ், சர்வதேச இந்துமதபீடச் செயலாளர் வண. கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, மயூராபதி ஸ்ரீ பத்திரிகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெ. சுந்தரலிங்கம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அனிருத்தனன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் முன்னாள் செயலாளருமான திருமதி. சாந்தி நாவுக்கரசன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார் கோவில் அறங்காவலர் சபைத் தலைவர் ஏ. மாணிக்கவாசகர் முதலாவது கொடியைப் பெற்று நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கொடி விற்பனை மூலம் கிடைக்கும் நிதியானது அந்தந்த மாவட்டத்திலுள்ள சமய நிறுவனங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளின் வளர்ச்சிக்கும், பலவகையிலும் பாதிக்கப்பட்ட வசதியற்ற இந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.










