தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால் முதலாளிமார் சம்மேளனமும், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அரசாங்கம் கோரியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்க முயற்சி செய்தோம். ஆனால் அதற்குக் கம்பனிகள் உடன்படவில்லை. இதேவேளை நாளாந்த சம்பளமாக 800 ரூபாயையும், வருகைக்கான கொடுப்பனவாக நூறு ரூபாவும், உற்பத்தித்திறன் கொடுப்பனவாக நூறு ரூபாவும் வழங்கி, மொத்தமாக ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வந்தன. ஆனாலும் தொழிற்சங்கங்கள் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததால், அரசாங்கத்தினால் கம்பனிகளின் யோசனைக்கு இணங்க முடியாதுள்ளது.
இந்த நிலையிலே சம்பள நிர்ணயச்சபையின் ஊடாக ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்தார் . இதனை எதிர்த்து பெருந்தோட்டக் கம்பனிகள் உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளன. பெருந்தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் வர வேண்டும் இதன் மூலமே பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
