சிறையில் வாடும் அன்பு மகன் அமலுக்கு, அப்பா கந்தசாமி எழுதும் கடிதம்…!

14 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகுதான் ராமனுக்கு அயோத்தியை ஆளும் அதிகாரம் கிடைத்தது. எனவே, நீயும் சிறைவாசத்தைத் தைரியமாக எதிர்கொள். நிச்சயம் ஒருநாள் நாடாளலாம்! யாகம் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சூனியப் பூஜையும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கவி பாடியே அரியணை ஏறும் அதிசயம்கூட இந்தத் தீவில் நடக்கப்போகிறதாம். ‘பேய்’களும் அழைக்கப்பட்டுள்ளன. இனி அந்த விகாரமகாதேவிதான் நம்மையெல்லாம் காக்க வேண்டும்!

என்னடா, வழக்கமாகக் கள்ளுக் குடித்துவிட்டு இரவு எட்டு மணிக்கு மேல் புலம்பும் அப்பா, இப்போது கடிதத்திலும் ஏதோ உளறுகிறாரே என்று யோசிக்கிறாயா, என் அன்பு மகனே? நீ நினைப்பதும்கூடச் சரிதான்! பிக் பொஸ் வீட்டுக் கதைகள் நமக்கு எதற்கு? இனி நமது பாவக் கதைகளுக்குள்… மன்னிக்கவும், பாவிகளின் வாழ்க்கைக்குள் நுழைகிறேன்.

பத்தாம் இலக்கத் தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்தபோது, நமது வீட்டு முதல் பெண்மணி… மன்னிக்கவும், என் கண்மணிக்கு குளவி கொட்டிவிட்டது. நீ பிறந்த அதே தோட்டத்து வைத்தியசாலையில்தான் அம்மா சிகிச்சை பெற்று வருகிறாள்.

அதே வைத்தியசாலையில்தான் என்னையும் அனுமதித்திருக்கிறார்கள், மகனே. ஏதோ பரிசோதனை செய்ய வேண்டுமாம். மேலதிக சிகிச்சைக்காக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வண்டி இல்லையாம். அது வரும் வரை மூன்று நாட்களாக இங்கேயே தங்கியிருக்கிறேன்.

‘அழகான மலையகம், சுகமான வாழ்வு’ என்பது எங்களுக்கு என்னவோ எட்டாக்கனியாகவே தெரிகிறது, மகனே!

தள்ளாடும் வயதிலும் நான் உனக்குக் கடிதம் எழுதுவதைப் பார்த்த தாதியம்மா, “என்ன, அடுத்த நாடகத்துக்குத் திரைக்கதை எழுதுகிறீர்களா?” என்று புன்னகைத்துவிட்டுச் செல்கிறாள். நமது குடும்பக் கதையின் ஆழம் அவளுக்கு எங்கே தெரியப்போகிறது?

உனது மூத்த தம்பி கொழும்புக்குச் சென்றுவிட்டான். இளைய தம்பியோ இன்னும் வெளிநாட்டு மோகத்திலேயே இருக்கிறான். கடைசியாக வந்த கடிதம்கூட மடுவத்தில் தொலைந்துபோய்விட்டதாம்.
எங்களுக்கு ஒரு முகவரியைப் பெற்றுக்கொடுக்க வந்தவர்களுக்கெல்லாம் ஏதோவொரு வகையில் அரசியல் முகவரி கிடைத்துவிட்டது. ஆனால், எங்களுக்குத்தான் இன்னும் வலிசுமந்த வாழ்க்கை!

மகனே, நீ சிறைக்குச் சென்றபோது குன்றும் குழியுமாக இருந்த நமது தோட்டத்து வீதி, இப்போது அதைவிட மோசமாகக் காட்சியளிக்கிறது.
ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவினர் தப்பித்தவறி இந்தப் பக்கம் வந்தால், தரை நீச்சல் போட்டியை நடத்துவதற்கு இந்த வீதியைப் பரிந்துரைக்கக்கூடும்!

“திசை மாறும், வழி பிறக்கும், மாற்றம் வரும்” என்றெல்லாம் நீ எனக்கு நம்பிக்கை கொடுத்தாய். ஆனால், இங்கே வீதியில் குழிகள்தான் பெரிதாகிக்கொண்டிருக்கின்றன, மகனே!
யாருக்குத்தான் நம்மீது உண்மையான பாசம் இருக்கிறது? எல்லாமே வெளிவேஷம்தான் என்று சொல்லும் நிலைக்கு என் மனம் வந்துவிட்டது.

நமது சித்தப்பா வீட்டுப் பசு, கடந்த வாரம் வழிதவறிப் பங்களாவுக்குப் புல் மேயச் சென்றுவிட்டதாம். அதைப் பார்த்த துரை எட்டி உதைத்து விரட்டியடித்துவிட்டாராம். பாவம், அந்தப் பசுவுக்குத் தந்தங்கள் இருந்திருந்தால், அதைப் பற்றியும் சுஜித் தம்பிமார் பேசியிருப்பார்கள். நீதிக்காகக் குரல் கொடுத்திருப்பார்கள். இப்போது அந்தப் பசு பட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. அடுத்த பிறவியிலாவது அது தந்தங்களுடன் பிறக்கட்டும்!சுஜித் வந்து முத்தம் கொடுத்து படம் எடுக்கட்டும்.

நமது ஊர்த் திருவிழாவில் வேல் குத்தும் வேல்முருகன் அண்ணனுக்குப் பக்கவாதம் வந்துவிட்டது. பக்கத்து ஊர் பத்தா சூனியம் வைத்துவிட்டாளாம். அந்தச் சூனியத்தைச் சக்தியிழக்கச் செய்ய யாராவது இருக்கிறார்களா?
உனது பக்கத்து அறையில் இருக்கும் கலபொட தோட்டத்துப் பொடியனிடம் ஒருமுறை கேட்டுப் பார். அவனுக்காவது இதற்கான வழி தெரியலாம்!

என் அன்பு மகனே, நமக்கு வலியும் வேதனையும் துரோகமும் புதிதல்ல. காட்டிக்கொடுத்தல், கழுத்தறுத்தல், கைவிரித்தல் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். எது நடந்தாலும் பரவாயில்லை. நம்பிக்கையைக் கைவிடாதே! உனக்குப் பல் துலக்குவதற்குச் சின்னல் தராத சக கைதிகளைப் பழிவாங்க நினைக்காதே. பழிவாங்குதல் என்பது நமது குடும்பத்தின் பாரம்பரியம் அல்ல! நீ சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, நீ ஜில் போல் அடிக்கும்போது உன்னுடன் சண்டை பிடித்த சின்னவரின் மகனையும் பழிவாங்கிவிடாதே. தர்மம் உன்னைக் காக்கும்!

இறுதியாக ஒரு விஷயம், மகனே. அதிகாரம் என்பது நிரந்தரமல்ல. இன்று அரியணையில் இருப்பவர் நாளை இறங்க வேண்டியிருக்கலாம்; இன்று சிறையில் இருப்பவர் நாளை வெளியே வரலாம். ஆனால், அந்த மாற்றங்களுக்கிடையில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மட்டும் மாற்றமே இல்லாமல் போய்விடக் கூடாது.

பேப்பர் தாள் முடிந்துவிட்டது, மகனே. அதனால் இத்துடன் கடிதத்தை முடித்துக்கொள்கிறேன்.

கவனமாக இரு. அந்தப் பரம்பொருளின் துணை உனக்குக் கிடைக்கட்டும்!
இப்படிக்கு,

உனது அன்புத் தந்தை,
கந்தசாமி.

ஆர்.சனத்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles