தமிழக நிவாரணப் பங்கீட்டில் இ.தொ.கா. அழுத்தம்! ஜீவன் மறுப்பு – வழக்கு தொடுக்கவும் ஏற்பாடு!!

” தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜீவன் தொண்டமான் அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன குற்றஞ்சாட்டினார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மறுத்துள்ளார். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தற்போது பகிரப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இதில் அரசியல் தலையீடு இடம்பெறுவதாகவும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஶ்ரீலலங்கா கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

” தோட்டப்பகுதிகளில் உள்ள மக்களுள் வறியவர்கள் யார் என்பது எமக்கு தெரியும். பங்கீட்டு பணியை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள், அரசியல் வாதிகள் தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, அரசியல் தலையீடு தொடர்ந்தால், நிவாரணங்களை பங்கிடும் செயற்பாட்டிலிருந்து விலகுவோம் என இலங்கை அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தொடர்பில் நாடளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று மாலை கருத்து வெளியிட்டுள்ளார்.

” என்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம சேவையாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்படும். குற்றச்சாட்டை அவர்கள் நிரூபிக்காத பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

5000 ரூபா நிவாரணப் பணியின்போது குறைப்பாடுகள் இடம்பெற்றன. நிறைய பேருக்கு அந்த கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் அந்த தவறு இடம்பெறக்கூடாது, அனைவருக்கும் உரிய வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தோம். நான் எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. தனக்கு தேவையான ஆட்களுக்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கவும் இல்லை.” – என்று ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles