தென்கொரிய விமான விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது.

முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.

லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தென் கொரியாவின் முவான் நகரில் நடந்த விமான விபத்தில் இரண்டு நபர்களை தவிர அதில் பயணம் செய்த 179 பேரும் உயிரிழந்துள்ளதாக என தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உயர்மட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது. ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Related Articles

Latest Articles