” சுயாதீனமாக செயற்பட முடியாமல்போனால் ‘கோபா’ குழுவின் தலைமைப்பதவியை துறப்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ‘கோபா’ குழுவின் தலைவருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவியை எதிரணிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கோபா குழுவுக்கு நான் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டிருந்தேன். எனினும், கோப் குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில் எம்மால் திருப்தி கொள்ள முடியாது. அப்பதவிக்கு எரான் விக்கிரமரத்னவை நியமிக்க எதிரணிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
கோப் குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரஞ்சித் பண்டார திறமையானவர் என்றபோதிலும் கொள்கை ரீதியலான முரண்பாடு உள்ளது. அவரின் பெயரை மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந் அதனை ரோஹித அபேகுணவர்தன வழிமொழிந்தார். ஆளுங்கட்சி சார்பிலேயே இத்தேர்வு இடம்பெற்றுள்ளது. எனவே, இக்குழு ஊடாக அரச நிறுவனங்கள் தொடர்பில் எவ்வாறு விசாரணை நடத்துவது?
எனவே, ‘கோபா’ குழுவின் தலைவராக செயற்படுவது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. சுயாதீனமாக செயற்பட முடியாவிட்டால் முடிவொன்றை எடுப்பேன்.” – என்றார்.










