இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கக் குறிப்பை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 மாநில முதலமைச்சர்கள் தங்களது மாநிலங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணித் தலைவர்கள் அரசியல் சாசன நிறுவனங்களை அவமதிக்கும் சதியில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து வெளியிடுகையில்,
வாக்குகள் எதுவும் திருடப்படவில்லை, ராகுல் காந்தியின் மனம்தான் திருடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு நிறுவனங்களை அவமதித்து ராகுல் காந்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குவதாகச் சாடினார்.
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘இந்தியா’ கூட்டணியை “தோல்வியடைந்தவர்களின் கூட்டணி” என விமர்சித்தார்.
நாட்டில் இப்போது வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றும் முறை செல்லாது என்பதால், வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது அவசியமானது என பிகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார்.
இதனிடையே, எக்ஸ் (X) தளத்தில் மறைமுகமாகப் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “கடல் அலை கொந்தளிப்பாக இருக்கும் போது நீந்துவது எனக்குப் பிடிக்கும். கொந்தளிப்பும் ஒரு வகையான அமைதிதான் என்பதை அது கற்றுத் தருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










