கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நுவரெலியா தலவாக்கலை வீதியின் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் மீண்டும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியா பிரதான வீதிப் பொறியியலாளர் ஊடாக பெருந்தெருக்கள் அமைச்சிடம் தொழில்நுட்ப அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் ரதெல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விபத்தின் காரணமாக வீதியை நிரந்தரமாக மூட முடியாது. ரம்பொட வளைவு, எல்ல பள்ளத்தாக்கு, கடுகன்னாவ பள்ளத்தாக்கு, கண்டி கலிகமுவ வீதிகளில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறெனின் கொழும்பு- கண்டி வீதியையும் மூட வேண்டும்.
ரதெல்ல குறுக்கு வீதியை தொடர்ச்சியாக மூட முடியாது. இந்த வீதி இரு பாதைகளாக விரிவுபடுத்தப்பட்டு காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச வாகன சாரதிகளால் இந்த வீதியில் விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆனால் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகன சாரதிகளினால் அதிகளவான விபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது வீதிப் போக்குவரத்து பிரிவின் ஊடாக வீதி அனுமதிப் பத்திரம் பெற்ற பல பேருந்துகள் உள்ளன. ரதெல்ல குறுக்கு வீதியை திறக்குமாறு அவர்களும் பாடசாலை பேருந்து சங்கங்களும் தனக்கும் ஜனாதிபதிக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்கள். இவ் வீதியில் கடந்த வாரம் இடம்பெற்ற உயிரிழப்புக்கு பிரதான காரணம் செங்குத்தான வீதியில் பேருந்தை சாரதி பொறுப்பற்ற முறையில் செலுத்தியதேயாகும். எனவே இது குறித்தும் அவதானிப்பதாக அவர் தெரிவித்தார்.
