‘பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக அமைப்புகளை பதிவுசெய்ய நடவடிக்கை’

பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக அமைப்புக்களை பதிவு செய்வதற்கு பதுளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஏகமனதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒருங்கிணைப்பு சபை இணைத்தலைவர்களான ஊவா ஆளுனர் ஏ.ஜே எம். முஸம்மில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன தெனிப்பிட்டிய தலைமையில் இடம்பெற்ற போதே, மேற்படி இணக்கம் காணப்பட்டது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விடுத்த கோரிக்கையொன்றிற்கமையவே, பெருந் தோட்டப்பகுதிகளில் சமூக அமைப்புக்களை பதிவு செய்ய இணக்கம் காணப்பட்டதாகும்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘பெருந்தோட்டப்பகுதிகளில் அரசினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்மாலும் நிதி ஒதுக்கப்பட்டு, சமூக மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதற்கமைய அவ் வேலைத்திட்டங்களை பதிவு செய்யபட்ட சங்கமொன்றினாலேயே முன்னெடுக்க முடியும். ஆனால், பெருந்தோட்டப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சமூக அமைப்புக்கள் இல்லாதுள்ளன. ஆகையினால், கிராமங்களை நாடிச் சென்று, அங்குள்ள பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஊடாகத்தான் சமூக மேம்பாட்டு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வகையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் சமூக அமைப்புகளுக்கு உதாரணமாக பத்து இலட்ச ரூபா நிதி வேலைத்திட்டத்திற்கு ஐந்து வீதம் என்றடிப்படையில் 50 ஆயிரம் ரூபா வரி செழுத்த வேண்டியுள்ளது.

பெருந்தோட்டங்களில் சமூக அமைப்புக்கள் இருக்கும் பட்சத்தில், அவ் அமைப்புக்களிடம் வேலைத்திட்டங்களை ஒப்படைத்தால், அமைப்பிற்கு செழுத்தும் மேற்படி வரி பெருந்தோட்ட அமைப்புக்களை சென்றடையும் போது, அவ் வரி மூலமும் அதே தோட்டத்திற்கு மேலதிக வேலைகளை மேற்கொள்ள முடியும். இதனைக் கருத்திற் கொண்டு தான், பெருந்தோட்டப்பகுதிகளின் சமூக அமைப்புக்களை பதிவு செய்யுமாறு கோருகின்றேன்.
கிராமங்களைப் பொறுத்த வரையில் சமூக அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள் என்ற வகையில் பல்வேறு அமைப்புக்கள் அரசினால் பதிவு செய்யபட்டுள்ளன. அத்துடன் 45 குடும்பங்களை மையப்படுத்திய வகையில் சமூக அமைப்புக்களை பதிவு செய்ய முடியுமென்று பிரதேச செயலகங்களுக்கு, அரசினால் அறிவுறுத்தப்பட்டுமிருக்கின்றது.

அவ் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பெருந்தோட்டப்பகுதிகளில் பல்வேறு அமைப்புக்கள் பதிவு செய்ய முடியும். ஆனால், தோட்டப்பகுதிகளில் அமைப்புக்கள் பதிவு செய்யப்படுவதற்கு அரச உத்தியோகத்தர்களினால் இழுத்தடிப்புக்கள் செய்யப்படுகின்றன. எமது பன் முகப்படுத்தப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் பெருந்தோட்டப்பகுதி அமைப்புக்களிடம் ஒப்படைக்கும் போது, எதிர்பார்த்ததை விட கூடுதலான வேலைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். வேலைத்திட்டங்களும் உறுதியாக அமைக்க முடியும்.

கிராமிய அமைப்புக்களிடம் வேலைத்திட்டங்கள் ஒப்படைக்கும் போது, பெருந்தோட்ட மக்களினால் வேலைத் தரங் குறித்து எதுவும் பேச முடியாத நிலை ஏற்படும். தரக்குறைவாக வேலைத்திட்டங்களை நிறைவு செய்து விட்டு, ஒப்பந்த பணத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்வதே, அவர்களின் நோக்கமாகவும் இருக்கும். ஆகையினால், பெருந்தோட்டங்களில் இருந்து வரும் சமூக அமைப்பு பதிவு விண்ணப்பங்களை ஏற்று, அவற்றினை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.

இது விடயம் குறித்தும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே கூடிய அக்கறை செழுத்தி அதனை ஏகமானதாகவே ஏற்றுக்கொண்டனர்.

Related Articles

Latest Articles