மே 09ஆம் திகதி வன்முறையின் பின்னணியில் மதத்தலைவர்கள் – பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு!

நாட்டில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் மதத் தலைவர்களும் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை பாதாள உலக கும்பல்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களையும் பாதுகாப்பதற்கு சட்டம் முன் நின்றது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமரகீர்த்தி அத்துகோரளவின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் ஒரு கொடூரமான படுகொலையாகும். அவர் கௌரவமாக வாழ்ந்த ஒரு மனிதர். பாராளுமன்ற உறுப்பினர்.

அவரது படுகொலையை தொலைக்காட்சியில் பார்த்தபோது அவரைக் கொன்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வீடுகளுக்கு தீ வைத்தவர்கள் நீதிமன்றத்தில் சுமார் 150 சட்டத்தரணிகள் மூலமாக எந்த குற்றமும் செய்யாதவர்கள் போன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற அப்பாவி மனிதர்களை கொல்வது எவ்வாறு நியாயமாகும். நாம் வெறுமனே அனுதாபப் பிரேரணை நடத்துவதில் பயனில்லை. இதன் மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இது நம் அனைவருக்கும் சிறந்த பாடம்.

சம்பவம் இடம்பெற்ற கடந்த மே 9ஆம் திகதி மக்களை குழப்புவதிலும் வீடுகளுக்கு தீ வைத்ததிலும் பௌத்த துறவிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களுக்கு தலைமைத்துவம் வழங்கியது அந்தப் பகுதிகளில் உள்ள பௌத்த துறவிகளே.

என்னுடைய வீட்டைத் தாக்குவதற்கு வந்தவர்களுள் ஒரு பௌத்த மத துறவியும் உள்ளடங்குகிறார்.

Related Articles

Latest Articles