மே 9 சம்பவம் – விசாரணை அறிக்கை எங்கே?

இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” கடந்த மே 09 ஆம் திகதி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவால் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதியிடம் மேற்படி குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை

நாட்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக இந்த குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அறிக்கையின் உண்மை தன்மையை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.” – என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, குழுக்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. குழுவினர் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

தற்போதைய ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவில்லை. இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – எனக் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles