பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை அமைதியான முறையில் நடைபெற்றது. பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீதமானோர் வாக்களித்தனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபட தெரிவித்தார்.
இன்று மாலை நடைப்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எவ்வித அசம்பாவிதங்களுமின்றி மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைப்பெற்றதாக சுட்டிக்காட்டிய அவர், பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் மேற் கொண்டார்கள் எனவும், அதிகாரிகள் தமது கடமைகளை சிறப்பான முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகிய போதிலும் காலை வேளையில் பல பகுதிகளில் வாக்களிப்பு மந்த கதியில் இடம் பெற்றது. ஆனாலும், பிறகு பெருந்தோட்டப்பகுதி மற்றும் நகர் புறங்களில் வாக்களிப்பு மிகவும் சுறுசுறுப்பாக இடம் பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் காலை 09 மணி வரை 20 வீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. 12 மணியளவில் அது 40 வீதமாகவும், 01 மணியளவில் 55 வீதமாகவும் வாக்களிப்புகள் இடம் பெற்றன. பகல் 01 மணிக்கு பின் வாக்களிப்பு சுறுசுறுக்காக இடம் பெற்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் அதிகளவானவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக இருந்தது.
(க.கிஷாந்தன்)