24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர் நியமனம்!

இலங்கையின் பிரதம அமைச்சராக கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு பெண்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.

1960 ஜுலை 21 ஆம் திகதி முதல் 1965 மார்ச் 25 ஆம் திகதிவரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்துள்ளார். உலகில் முதல் பெண் பிரதமர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. பிறகு 1970 முதல் 77 வரையும் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

அதன்பின்னர் 1994 ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் 1994 செப்டம்பர் 12 ஆம் திகதிவரை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராக பதவி வகித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றதும் தனது தயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை சந்திரிக்கா பிரதமராக்கினார். 1994 நவம்பர் 14 ஆம் திகதி முதல் 2000 ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை அவர் பிரதமராக செயற்பட்டார்.

2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரத்னசிறி விக்ரமநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச, திமு ஜயரத்ன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதமர் பதவியை வகித்துள்ளனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 2 தசாப்தங்களுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Related Articles

Latest Articles