கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதிகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீதான தாக்குதல்கள் பெரும் தடையாக அமைந்துள்ளதாக ஆபிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Africa CDC) எச்சரித்துள்ளது.
எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொங்கோவில் பரவி வரும் இந்த எபோலா தொற்று காரணமாக இதுவரை 5,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆயுத மோதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் நோயாளிகளைக் கண்டறிதல், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்தல் மற்றும் சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.
அண்மையில் வடக்கு கிவு மாகாணத்தின் கான்டின் – அலோயா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 66 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களில் மூன்று சுகாதாரப் பணியாளர்களும் அடங்கியிருந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்போது மூன்று மருத்துவ நிலையங்களும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுத் தொடர்பாளர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உறுதிப்படுத்தப்பட்ட மூன்று எபோலா நோயாளிகள் தொடர்பான தகவல்களும் கிடைக்காமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதும், மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் சவாலாக அமைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச சுகாதார அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.










