கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் இரசாயன உரத்துக்கு தடை விதித்த முடிவானது தேயிலை உற்பத்தில் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நேற்று எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” இரசாயன உரத்துக்கு தடை விதித்த தவறான முடிவால் தேயிலை உற்பத்தி துறையும் பாதிக்கப்பட்டது. இது பற்றி நான் இதுவரை கதைக்கவில்லை. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் கூட்டு பொறுப்புக்காக அமைதிகாத்தேன். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதுபோல தேயிலை உற்பத்தி 60 வீதத்தால் வீழ்ச்சியடையவில்லை. 10 முதல் 15 வீதம்வரைதான் வீழ்ச்சியடையும். உரத்தடைதவிர, தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். ஆகவே தேயிலை உற்பத்தி முற்றாக சரிந்துவிட்டது என்ற கருத்தை ஏற்கமுடியாது. தற்போது உரம் கிடைக்கின்றது. சிறந்தகாலநிலை உள்ளது. எனவே, எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தியும் அதிகரிக்கும்.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
” தேயிலை விலை நூற்றுக்கு 360 சதவீதத்தால் அதிகரித்துள்ளது . இதனால் சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கின்றது. சர்வதேச சந்தையிலும் நல்ல விலை கிடைக்கின்றது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் சம்பிரதாயபூர்வ பங்களாகிகளாக விளங்கும் 10 நாடுகளில் 8 நாடுகளில் குறிப்பாக ரஷ்யா, உக்ரைன், சிரியா, ஈரான், ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் போர்சூழல் நிலவுகின்றது. இது தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் செலுத்தும்.
எனவே, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளை நோக்கி நகர வேண்டியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தேயிலைச் சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ” – என்றார்.
ஆர்.சனத்
