இலங்கையில் 1936 ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச குடும்பம் அரசியலில் ஈடுபட்டுவருகின்றது. மஹிந்த ராஜபக்சவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச அரச பேரவையில் அங்கம் வகித்துள்ளார்.
அதன்பின்னர் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெலியத்த தொகுதியில் இருந்து சபைக்கு தெரிவானார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் இவர்.
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த லக்ஸ்மன் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்தே அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர்.
இதனால்தான் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையாக அம்பாந்தோட்டை விளங்குகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் அநுர கைப்பற்றினார்.
இந்நிலையில் இம்முறை பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து எந்தவொரு ராஜபக்சவும் தேர்தலில் போட்டியிடவில்லை. நாமல் ராஜபக்சகூட தேசியப் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தில் இருந்து ஒருவர் மாத்திரமே – சசீந்திர ராஜபக்ச, மொனறாகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவர்தான் காமினி திஸாநாயக்க. நவீன் திஸாநாயக்க மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோரின் தந்தை அவர்.
காமினி திஸாநாயக்கவின் மறைவின் பின்னர் அவரது மனைவி தேர்தலில் ஈடுபட்டார். அதன்பின்னர் நவீன் திஸாநாயக்க, மயந்த திஸாநாயக்க ஆகியோர் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டனர். நவீன் திஸாநாயக்க நுவரெலியாவிலும், மயந்த திஸாநாயக்க கண்டியிலும் களமிறங்கியுள்ளனர். ஆனால் இம்முறை இருவரும் போட்டியிடவில்லை.
சேமசிங்க குடும்ப வாரிசான செஹான் சேமசிங்கவும் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினரான லக்ஸ்மன் கிரியல்ல, தனது மகளுக்கு அரசியல் களத்தை அமைத்துக்கொடுப்பதற்காக இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. கண்டி மாவட்ட எம்.பியான குணதிலக ராஜபக்சவும், தனது மகனை களமிறக்கிவிட்டு, ஓய்வுபெற்றுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, குடியரசுக் கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, மஹஜன எக்சத் பெரமுனவின் தலைவர் தினேஸ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மூத்த தலைவர் வாசுதேவ நாணயக்கார, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆர்.சனத்