முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழகக் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “இந்த மண் எங்களின் சொந்த மண்”, “கலாசார அழிப்பை நிறுத்து”, “தழிழரின் நிலம் தமிழருக்கே”, “நிலம் எங்கள் சொத்து! அதனைப் பறிக்க முனையாதே!!”, “விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விவசாயிகளை விடுதலை செய்” ஆகிய கோஷங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், சிவில் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த மே மாதம் 10 ஆம் திகதி குமுழமுனை – தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் காணியின் உரிமையாளர் தனது பணியாட்களைக் கொண்டு உழவு இயந்திரத்தின் மூலம் குருந்தூர்மலை பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டார். இதன்போது தொல்பொருள் தளத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி தேரர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய இரண்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியே போராட்டம் நடத்தப்பட்டது.










