மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்தியஸ்தம் வகிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வந்துள்ளார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்.
ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன.
இதன் காரணமாக டெஹ்ரானிலும், டெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் வீடுகளிலும் கூட கரும்புகை சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலும் கூட புகை மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இதனால் அங்குள்ள நோயாளிகள் மூச்சுவிட முடியாமல் திணறி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை (கிரெம்ளின்) செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ ஈரான் மீது ராணுவ நடவடிக்கை தொடங்குவதற்கு முன், பிரச்சினையின் தொடக்க நிலையிலேயே அதை தீர்ப்பதற்காக பல்வேறு யோசனைகளை ஜனாதிபதி புடின் தெரிவித்தார். இதில் பல யோசனைகள் இப்போதும் பரிசீலனைக்கு உகந்தவை. இந்த விவகாரத்தில் ரஷ்யா தன்னால் முடிந்த அளவு உதவி செய்யத் தயாராக உள்ளது.
மேலும் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. என்றாலும் இதற்கு பல புரிதல்கள் மற்றும் பல ஒப்பந்தங்கள் தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நாங்கள் சற்று பொறுமை காக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் தொலைபேசியில் பேசியதற்கு மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த தொலைபேசியின் நோக்கம் என கிரெம்ளின் தெரிவித்தது.
இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஈரான் விவகாரத்தில் புதின் உதவி செய்ய விரும்புகிறார். இருப்பினும், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நீங்கள் இன்னும் உதவியாக இருக்க முடியும் என்று நான் புதினிடம் தெரிவித்தேன்” என்றார்.










