ஹார்முஸ் நீரிணை முற்றுகை: ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்!

ஹார்முஸ் நீரிணையை சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிலையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

“ ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே சென்றது, பெரும்பாலான அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை.

எனவே, உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில், உலகின் மிகச்சிறந்த அமெரிக்கக் கடற்படை, ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடும் பணியைத் தொடங்கும்.

அனைவரும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால், ஈரானோ ‘கடலில் எங்கோ கண்ணிவெடிகள் இருக்கலாம்’ என்று கூறி மிரட்டல் விடுக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒருபோதும் இதற்குப் பணிய மாட்டார்கள். ஈரானுக்கு சட்டவிரோதமாகக் கட்டணம் செலுத்தும் சர்வதேசக் கப்பல்களை வழிமறித்துச் சோதனையிடக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். அத்தகையோருக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது.

ஈரானியர்கள் நீரிணையில் வைத்துள்ள கண்ணிவெடிகளை அழிக்கும் பணியையும் நாங்கள் தொடங்குவோம். எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் ஈரானியர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
ஏற்கனவே சிதைந்து போயுள்ள ஈரான், இந்தச் சூழலை எப்படி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை நன்கு அறியும்.

அவர்களின் கடற்படை, விமானப்படை மற்றும் ரேடார் அமைப்புகள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. அவர்களின் தலைவர்கள் பலர் பலியாகிவிட்டனர். இவை அனைத்தும் அவர்களின் அணுசக்தி பேராசையால் விளைந்தவை.

நாங்கள் இப்போது முழுமையாகத் தயார் நிலையில் உள்ளோம். ஈரானின் எஞ்சியப் பகுதிகளை எங்களது ராணுவம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் ஏற்கனவே தகித்துக் கொண்டிருக்கும் போர் சூழலை மேலும் சூடாக்கியுள்ளது.

Related Articles

Latest Articles