இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ஜனநாயக எழுச்சியை வரவேற்றுள்ள அவர், மலையக மக்களின் வாழ்வுரிமைக்கான இந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
“அடக்குமுறையின் உச்சகட்டம்”
“நீலகாமம் தோட்டத்தில் அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க முனையும் கூலிப்படைகளின் அட்டகாசம் என்பது அடக்குமுறையின் உச்சகட்டமாகும். அதிகார பலத்தைக் கொண்டு ஒரு சமூகத்தின் மீது வன்முறையை ஏவிவிடுவது எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
தமது மக்களின் இருப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக எழுச்சியை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இத்தகைய இளைஞர்களின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு எமது இயக்கத்தின் முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும்,” என வேலுகுமார் தெரிவித்தார்.
“வெறும் ஆர்ப்பாட்டங்கள் மட்டும் தீர்வாகாது”
சம்பவங்கள் நடந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, பின்னர் அமைதியாகும் போக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “நீலகாமம் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்.
இது தற்காலிகமான ஒரு உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கையாக இருந்துவிடக்கூடாது. மீண்டும் இப்படியான அநீதிகள் நிகழாத வண்ணம், நிலையான தீர்வுக்கு வழிவகுக்கக்கூடிய உணர்வுப்பூர்வமான நகர்வுகளே இன்று தேவை. இளைஞர்கள் வெறும் எதிர்ப்பாளர்களாக மட்டுமல்லாமல், அதிகார மட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வலுவான ‘அழுத்தக்குழுக்களாக’ மாற வேண்டும். அத்தகைய முற்போக்கான நகர்வுகளுக்கு நாம் என்றும் தோள் கொடுப்போம்,” எனத் தெளிவுபடுத்தினார் வேலுகுமார்.
“மலையகம் முழுவதும் விழிப்புணர்வு தேவை”
“இது நீலகாமம் தானே என்று எவரும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அன்று அந்தத் தோட்டத்தில் நடந்தது, நாளை மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் நடக்கலாம். ஏற்கனவே கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இத்தகைய வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் அரங்கேறியுள்ளன. எனவே, நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. எமது இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், எமக்கான நில உரிமையை முழுமையாக வென்றெடுக்கும் விதத்திலும் இந்தப் போராட்டத்தை நாம் நாடு தழுவிய மட்டத்தில் விரிவுபடுத்த வேண்டும்.
“வெற்றி நமதே!”
“நில உரிமைதான் எமக்கான நிஜ உரிமை” என்பதை மையமாகக் கொண்டு, மலையக மக்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதற்கான இந்த அறப்போராட்டத்தில் இளைஞர்கள் முன்நிற்பது, மலையகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அடக்குமுறைகளை முறியடித்து, உரிமைகளை வென்றெடுக்கும் வரை இப்போராட்டக் களம் தொடரும். மலையகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்,” என்று வேலுகுமார் எம்.பி. அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.










