மே 21 சர்வதேச தேயிலை தினம்: இலங்கையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை தின நிகழ்வு தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறிய கருத்துகள் வருமாறு,

“இலங்கை என்ற நாமம் உலகலாவிய ரீதியில் தெரியவருவதற்கு தேயிலையே பிரதான காரணமாக அமைந்தது. சிலோன் டீ என்றாலே உலகளவில் அதிகளவான மக்கள் விரும்பி அருந்தும் தேநீராகும்.

சர்வதேச தேயிலை தினம் எதிர்வரும் 21 ஆம் திகதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. இலங்கையிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய மே 21 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு தேயிலை சபைக்கு அருகில் இருந்து நடை பவனி ஆரம்பமாகும். காலி முகத்திடல்வரை அந்த நடை பவனி இடம்பெறும்.

தேயிலைத் தொழில்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டே இதற்குரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

அதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதகரங்கள் ஊடாக 30 இற்கு மேற்பட்ட நாடுகளில் இலங்கை தேயிலை தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

2027 ஆம் ஆண்டாகும்போது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச சந்தையில் இன்று போட்டி உள்ளது. எனவே, சிலோன் டீ நாமத்தை மேலும் மேலோங்க வைக்க வேண்டும்.

அதேவேளை, தேயிலை துறையில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமை உட்பட அம்மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

தேயிலைக் கைத்தொழிலை பாதுகாப்போம், சமூகத்தை வலுப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெறவுள்ள தேயிலை தின நிகழ்வில், காலி முகத்திடலில் பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.” – என்றார் பிரதி அமைச்சர் பிரதீப்

Related Articles

Latest Articles