வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களில், அந்நாட்டின் இரண்டாம் பிரிவு கால்பந்து அணியைச் சேர்ந்த அர்ஜென்டினா வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்துள்ளார்.
‘கிளப் ஸ்போர்ட் மாரிட்டிமோ லா குவைரா’ (Club Sport Marítimo La Guaira) அணிக்காக விளையாடி வரும் லூகாஸ் ட்ரெஜோ , கடந்த மூன்று நாட்களாகத் தனது மனைவி யானினா (Yanina) மற்றும் தங்களது குழந்தைகளான ஆரோன் (Aarón), ஐன்ஹோவா (Ainhoa) ஆகியோரின் இருப்பிடத்தைக் கண்டறிய இடிபாடுகளுக்கு இடையே தீவிரமாகத் தேடி வந்தார்.
நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான லா குவைராவில் இருந்த இந்த வீரரின் கடற்கரையோர வீடு இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், இதனால் ட்ரெஜோ “மனரீதியாக முற்றிலும் உடைந்துபோய் உள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வெனிசுலாவில் இந்த இயற்கை பேரிடரால் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
38 வயதான ட்ரெஜோ, நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் தலைநகர் கராகஸில் (Caracas) தனது அணியின் பயிற்சி முகாமில் இருந்தார்.
நிலநடுக்கம் குறித்து அறிந்தவுடன், அவர் தலைநகரிலிருந்து வடக்கே 18 மைல் தொலைவில் உள்ள லா குவைராவில் இருக்கும் தனது வீட்டிற்கு விரைந்தார்.
“அவர் அங்கு கண்டது ஒரு கொடூரமான காட்சி. அந்த அடுக்குமாடி குடியிருப்பு இருந்ததற்கான எந்தவொரு அடையாளமும் அங்கு இல்லை. அவர்கள் அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் இருந்திருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் ஒரே பிரார்த்தனையாக இருந்தது” என்று ஆர்டிலெஸ் கூறினார்.
இடிபாடுகளை அகற்றித் தேடுவதற்கு கனரக இயந்திரங்கள் தேவைப்பட்டதால், ட்ரெஜோ அங்குள்ள இடிபாடுகளைத் துழாவித் தேடியபடியே உதவிக்குக் கோரிக்கை விடுத்தார்.
அவரது நண்பர்களும் சக வீரர்களும் அதிக இயந்திரங்களை அனுப்புமாறு கோரி ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.
இருப்பினும், அந்தத் தேடுதல் வேட்டை ஒரு நெஞ்சை உலுக்கும் சோகத்துடன் முடிவுக்கு வந்தது.
கிளப் ஸ்போர்ட் மாரிட்டிமோ லா குவைரா அணி தனது சமூக ஊடகப் பக்கத்தில், ட்ரெஜோவின் குடும்பத்தினரின் “ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை” தெரிவித்தது.
ட்ரெஜோ தனது மகளின் தோளிலும், மனைவியின் தோளிலும் கைகளைப் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் தங்களின் குடும்பப் புகைப் படம் ஒன்றையும் அந்த கிளப் பகிர்ந்துள்ளது.
“லூகாஸ், நீங்கள் தனிமையில் இல்லை. மாரிட்டிமோ லா குவைராவில் உள்ள உங்கள் குடும்பம் உங்களுடன் இருக்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்ட இந்த விசித்திரமான இரட்டைப் பேரிடர் (Doublet), நாட்டில் உள்ள பல கால்பந்து வீரர்களின் உயிர்களையும் பறித்துள்ளது.
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த 18 வயது இளம் வீரர் யிம்வெர்ட் பெரோடெரன் (Yimvert Berroteran) இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக வெனிசுலா தேசிய அணி மற்றும் வெனிசுலா கால்பந்து கூட்டமைப்பு (FVF) தெரிவித்துள்ளன.
இவர் சில மாதங்களுக்கு முன்பு தோஹாவில் நடைபெற்ற யு-17 (U-17) உலகக் கோப்பை மற்றும் சமீபத்தில் யு-20 (U-20) தேசிய அணிக்காகவும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.










