தாய்லாந்தில் 17 வயது சிறுமியொருவரின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் கடலோர நகரான பட்டாயா (Pattaya) காவல்துறையினர், சனிக்கிழமை அதிகாலையில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் வீசப்பட்டிருந்த ஒரு பையினுள் “திணிக்கப்பட்ட” நிலையில் துஞ்சனோக் டான்ஹோம்லா (Tunchanok Donhomla) என்ற பெண்ணின் உடலைக் கண்டெடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து “நாட்டை விட்டு தப்பியோட முயன்றபோது” சைமன் பீட்டர் கார்மன் (Simon Peter Carman) என்பவரைக் கைது செய்ததாகத் தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு கார்மன் அனுப்பிய செய்தியில், “உங்கள் மகளுக்கு நேர்ந்த சம்பவத்திற்காக நான் வருந்துகிறேன். அது என் கட்டுப்பாட்டை மீறி நடந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணிக்கு (12:00 GMT) அந்த 17 வயதுப் பெண் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்ததாக பட்டாயா நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, வியாழக்கிழமை அதிகாலை 3:34 மணிக்கு கார்மன் அந்தப் பெண்ணுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவது தெரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் அன்று நள்ளிரவில், அவர் ஒரு “பெரிய சூட்கேஸை” தூக்கிக்கொண்டு தனியாக வெளியே வந்துள்ளார்.
அந்தப் பையை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, ரயில் தண்டவாளத்தை நோக்கி அவர் ஓட்டிச் சென்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட்டாயாவிலிருந்து வடக்கே சுமார் 150 கி.மீ (93 மைல்) தொலைவில் உள்ள பேங்காக் விமான நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 1:15 மணிக்கு அதிகாரிகள் கார்மனை விசாரணை செய்து கைது செய்தனர்.
கார்மன் தன் மீதான கொலைக் குற்றச்சாட்டையும், உடலை மறைத்தல் அல்லது இடமாற்றம் செய்தல் மற்றும் பாலியல் நோக்கங்களுக்காக மைனர் பெண்ணை அழைத்துச் சென்றது போன்ற கூடுதல் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், தான் தற்காப்புக்காகவே செயல்பட்டதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
ஊடக அறிக்கைகளின்படி, கார்மன் காவல்துறையினரிடம் கூறுகையில், பாலியல் சேவைகளுக்காக அந்தப் பெண்ணுக்கு 1,000 பாட் (Baht) தருவதாக ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அறைக்குத் திரும்பியதும் அவர் 500 பாட் மட்டுமே கொடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் “அறையிலிருந்து காணாமல் போய்விட்டார்” என்று கார்மன் கூறியதாகத் தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காவலில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு விடுத்த செய்தியில்: “உங்கள் மகளுக்கு நேர்ந்த சம்பவத்திற்காக நான் வருந்துகிறேன். அது என் கட்டுப்பாட்டை மீறி நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
“நீங்கள் மிகவும் சோகமாகவும், மனமுடைந்தும் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்… நானும் அப்படித்தான் இருக்கிறேன்.”
தொடர்ந்து அவர், “தயவுசெய்து மற்ற பெண்களிடம் சொல்லுங்கள்… எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
பட்டாயா நகர காவல் நிலையத்தின் கண்காணிப்பாளர் கர்னல் அனெக் ஸ்ரதோங்யூ (Anek Srathongyoo) ஏபிசியிடம் பேசுகையில், கார்மனின் உடல் முழுவதும் நகக் கீறல்கள் உள்ளன, அவை ஒரு போராட்டத்தின் போது ஏற்பட்ட கீறல்களுடன் ஒத்துப்போகின்றன, ஆனால் அவர் அவளைக் கொன்றதை மறுக்கிறார்” என்று கூறினார்.
