அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வாரம் தோஹாவிற்கு வரவிருந்தன. ஆனால், நான்கு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால போர்நிறுத்தத்தை இருதரப்பிலிருந்தும் வார இறுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் பாதித்ததால், திங்களன்று எந்தச் சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று ஈரான் தெரிவித்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் தனது தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோரை பேச்சுவார்த்தைக் குழுவை வழிநடத்த அனுப்புவதாக அவரது ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
ஈரான் இந்த வாரம் தனது குழுவை கத்தாருக்கு அனுப்பும் அதே வேளையில், இதற்கும் அமெரிக்கர்களின் வருகைக்கும் “எந்த தொடர்பும் இல்லை” என்றும், இரு தரப்புக்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறினார்.
“வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கத் தரப்புடன் எந்தவொரு மட்டத்திலும் நாங்கள் எந்தவொரு பேச்சுவார்த்தை சந்திப்புகளையும் நடத்த மாட்டோம்,” என்று பகாய் கூறினார்.
இருதரப்பும் சந்திப்பார்களா என்பதில் உள்ள இந்த கருத்து வேறுபாடு, ஜூன் 17 அன்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் பலவீனத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த மோதலானது ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளதுடன், நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் காங்கிரஸின் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்பிற்கு ஒரு அரசியல் தலைவலியையும் உருவாக்கியுள்ளது.
ஏப்ரல் மாத போர்நிறுத்தத்தை நீட்டிக்கவும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து விவாதிக்கவும், நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்த அமெரிக்காவும் ஈரானும் தங்களுக்குள் குறைந்தது 60 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளன. ஆனால், ஒரு தரப்பு மற்றொரு தரப்பு ஒப்பந்த விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி வருவதால், முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் இணையவில்லை என்பதோடு, இந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னை விலக்கியும் வைத்துள்ளது.
ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாயன்று தோஹாவில் ஒரு சந்திப்பு இருக்கும் என்று கூறினார். ஆனால், சுவிட்சர்லாந்தில் இதற்கு முன்பு நடந்த ஈரான் – அமெரிக்கக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளைப் போலல்லாமல், இந்த முறை ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது மற்றும் பதற்றங்களைத் தணிப்பது குறித்தே கவனம் செலுத்தப்படும் என்றார்.
திட்டங்கள் குறித்து அறிந்த மற்றொரு அதிகாரி கூறுகையில், அமெரிக்கா மற்றும் ஈரானின் தொழில்நுட்பக் குழுக்கள் புதன்கிழமையன்று கத்தார் மற்றும் பாகிஸ்தான் தூதர்களைத் தனித்தனியாகச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “தோஹாவில் நடக்கும் சந்திப்பு சில சமயம் முக்கியமானதாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம்” என்றார். அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தினார்.
சமீபத்திய நாட்களில் ஈரான் குறைந்தது இரண்டு வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதுடன், அதற்குப் பதிலடியாக ஈரானிய இராணுவத் தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது.
கத்தாரில் முடக்கப்பட்டிருந்த ஈரானின் 12 பில்லியன் டொலர் சொத்துக்களில் 6 பில்லியன் டொலர் விடுவிக்கப்பட்டு ஈரானுக்குத் திருப்பித் தரப்படும் என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் திங்களன்று தெரிவித்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகள் மீதான தடைகளில் அமெரிக்காவின் விலக்குகளை உள்ளடக்கிய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை “ஈரானிய மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி” என்று அவர் விவரித்தார்.
வார இறுதி மோதல்கள் அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியதை அடுத்து எண்ணெய் விலைகள் 1% க்கும் மேல் உயர்ந்தன.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் திங்களன்று கூறுகையில், பதற்றங்களைத் தணிக்க தான் ஓமானுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், ஹார்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் கூறினார்.
ஆனால் அதற்கு ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தனது எக்ஸ் (X) தளப் பதிவில், 14 அம்சத் திட்டத்தின்படி கண்ணிவெடிகளை அகற்றுவது ஈரானால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று பதிலளித்தார். மேலும் நிலைமையைச் சிக்கலாக்க வேண்டாம் என்று அவர் பிரான்சுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கை ஏற்றிச் சென்ற ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல்சார் போக்குவரத்து கிட்டத்தட்ட முடங்கியது.
இந்த நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய் விலை ஒரு பெரலுக்கு 100 டொலருக்கும் மேல் உயர்ந்தது, இது உலகளாவிய பணவீக்கத்தை அதிகரித்தது. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்பிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலரே நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி போர் தொடுத்ததற்காக அதிபரைக் விமர்சித்துள்ளனர்.










