பதுளை – நமுனுகுல, கனவரல்ல தோட்டப் பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய துணை தூதுவர், ஹர்விந்தர் சங் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம், பதுளை மாவட்டத்தின் கனவரல்ல பகுதியில் மண்சரிவு அபாயத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த 57 குடும்பங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்திய அரசினால் 28 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுவதுடன், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசினால் 4 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்னன் செல்வராஜ், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் பயனாளிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
