சிறைச்சாலையையே பாதுகாக்க முடியாத அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்?

“சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்கள் விளக்கமறியலில் இருந்தாலும் அல்லது தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே உள்ளனர். எனவே, அவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உரியது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இதே கருத்தையே வலியுறுத்தியிருந்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள் வருமாறு:

மனிதாபிமானமற்ற தண்டனைகளுக்கு இடமளிக்கக் கூடாது

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிகளில் சிறைச்சாலை மறுசீரமைப்பு, சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைத்தல் மற்றும் கைதிகளைப் புனர்வாழ்வளித்தல் என்பன முக்கியக் கடமைகளாகும்.

அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் பிரகாரம், எந்தவொரு நபரையும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகைக்கோ அல்லது தண்டனைக்கோ ஆளாக்கக் கூடாது என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சோகமான சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

மாற்றமடையாத 76 வருட சாபம்

கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் சிறைச்சாலைத் துறையை மையமாகக் கொண்டு பல சோகமான சம்பவங்கள் அரங்கேறின. இதன் காரணமாகவே, ’76 வருட முறைமையை மாற்றியமைத்து, வளமான நாடொன்றையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம்’ எனக் கூறி சிறைச்சாலைத் துறையில் பல மாற்றங்களைச் செய்யப் போவதாக தற்போதைய அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தது.

அவ்வாறு 76 வருட சாபத்தை ஒழித்து புதிய முறைமையொன்றைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினாலும், நீர்கொழும்பில் நடந்த சம்பவத்தின் மூலம் இந்த ஆட்சி முறைமையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

சிறைச்சாலைகளின் நெரிசலும் அபாய மதிப்பீடும்

தற்போது சிறைச்சாலைத் துறையில் பெரும் சவால்கள் காணப்படுகின்றன. 10,000 பேருக்கு மட்டுமே இடவசதி உள்ள சிறைச்சாலைகளில், சுமார் 40,000 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

நாட்டில் பல சிறைச்சாலைகள் காணப்பட்டாலும், இவற்றின் பிரச்சினைகள் குறித்து நீதி அமைச்சர் எப்போதாவது ஆராய்ந்தாரா என்ற கேள்வி எழுகிறது. சிறைக்குள் நிலவும் இந்த மன அழுத்தம் மற்றும் நெருக்கடி குறித்து குறைந்தபட்சம் ஆராய்ந்து, அபாய மதிப்பீடு (Risk Assessment) ஒன்று ஏன் செய்யப்படவில்லை?

கடந்த காலச் சம்பவங்களில் இருந்து பாடம் கற்கவில்லை

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இருந்துகூட இந்த அரசாங்கம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதுவரை ஒரு நிரந்தர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தைக்கூட நியமிக்க இந்த அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது.
எல்லாவற்றையும் விட ஆச்சரியம் என்னவென்றால், இச்சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கூட நீதி அமைச்சரால் சரியாகக் கூற முடியாமல் போயுள்ளது. இக்கோரச் சம்பவம் நடந்த பின்னர் இதுதொடர்பான ஆரம்ப அறிக்கை ஏதேனும் பெறப்பட்டதா என்பதுகூட சந்தேகமாகவே உள்ளது.

அரசாங்கத்தின் தோல்வி

அரசாங்கத்தின் ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் மனிதத்துவ அடிப்படையிலான சிறைச்சாலை மற்றும் நீதியான தடுப்புக்காவல் வாழ்க்கை முறைமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று 27 பேரின் உயிர்கள் பறிபோய், நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“கைதிகள் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளதால் அவர்களின் உயிர் பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பு” என்று அன்று ஜனாதிபதி கூறிய கூற்றை இன்றைய நீதி அமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா என நான் கேட்க விரும்புகிறேன். இந்தச் சம்பவத்தில் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதுடன், வாக்குறுதியளித்த ‘முறைமை மாற்றத்தை’ (System Change) கூட செய்ய முடியாமல் போயுள்ளது.

நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கவே முயற்சி

சிறைக்குள் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பைக் கூட உறுதிப்படுத்த முடியாத இந்த அரசாங்கம், 220 இலட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தும்? தேசிய பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பையும் நாம் ஏற்போம் என வீராப்புப் பேசினாலும், இன்று அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போயுள்ளது.

நீதி அமைச்சர் இந்நாட்களில் சிறைச்சாலைப் பிரச்சினைகளை ஆராய்வதை விட, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டு வருகிறார். உயர் நீதிமன்றங்களில் நீதியரசர்களுக்கான பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இவற்றைப் பற்றி ஆராய்வதில் மூழ்கியுள்ளதால் அமைச்சருக்குத் தனது அத்தியாவசியப் பொறுப்புகள் கூட மறந்து போயுள்ளன. இனிமேலாவது ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை முழுமையாக வாசித்து, அதனை நடைமுறைப்படுத்த முன்வருமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles