மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்திரகுமார் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையிலுள்ள சுங்காங்கேணி – தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக, மேற்படி நபர் நேற்று திங்கட்கிழமை குளத்தில் வலையை வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் குளத்தில் வீசிய வலையை மீட்டு, மீன்களைப் பிடிப்பதற்காக அவர் மீண்டும் குளத்துக்குச் சென்றுள்ளார்.
எனினும், பகலாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் குளத்துக்குச் சென்று தேடியுள்ளனர்.
இதன்போது, அவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக வாழைச்சேனைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் இருந்தது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மீன்பிடிக்கும்போது ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாகவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










