பதுளை மாவட்டத்தின் பசறை – மடூல்சீமை பிரதான வீதியின், மூன்றாம் கட்டை பகுதியில் இன்று மதியம் முதல் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது.
இந்தத் தீ விபத்தினால் இதுவரை சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிராந்தியத்தில் நிலவும் அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாகத் தீ மேலும் வேகமாகப் பரவி வருவதனால், கூடுதல் வனப்பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
இதேவேளை, இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாகப் பசறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வனப்பகுதிகளுக்கு அருகில் பொதுமக்கள் தீ மூட்டுவதைத் தவிர்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏதேனும் அவதானிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
த.டிமேஷன்










