மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணனுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, மலையக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
முக்கியமாக, மலையக மக்கள் தற்போதைய சூழலில் எதிர்நோக்கி வரும் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக அவதானம் செலுத்தப்பட்டதுடன், அவற்றுக்கான நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய வழிமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
மேலும், மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்னெடுத்து வரும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களின் முன்னேற்றமே தமது அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு எனவும், மக்களின் தேவைகளைச் சரியாக அடையாளம் கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பேன் எனவும் உறுதியளித்தார்.
மலையகத்தின் நிலையான அபிவிருத்திக்காக அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களுக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










