2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அண்மைய அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத்துறையின் மூலமான இலங்கையின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அவ்வறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான சுற்றுலா வருவாய் மொத்தம் 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலராகும். இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியாகும்.

சுற்றுலா வருவாய் மாதாந்த அடிப்படையிலும் சரிவைக் கண்டுள்ளது. மே 2026 இல் சுற்றுலாத்துறை மூலம் நாடு 155.7 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டியிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அவ்வருவாய் 151.1 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

2025 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையிலும், சுற்றுலா வருவாய் ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 169.5 மில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர் மூலமான பண உள்வரவும் குறைந்துள்ளது.

மே மாதத்தில் தொழிலாளர் பண உள்வரவாக இலங்கை 847 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் இந்த உள்வரவு 695 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 152 மில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

இருப்பினும், இந்த மாதாந்த வீழ்ச்சிக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உள்வந்த பணவரவு, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட கணிசமானளவு அதிகமாகக் காணப்படுகிறது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 3,738 மில்லியன் அமெரிக்க டொலர் பண உள்வரவு கிடைத்திருந்த நிலையில், 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இலங்கை 4,604.8 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வருடத்தின் முதல் பாதியில் வெளிநாட்டுப் பண உள்வரவில் 866.8 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பைக் குறிக்கிறது.

Related Articles

Latest Articles