நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு: மலையக கட்சிகள் மௌனம்

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்துள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

“ நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எமது கட்சி கைச்சாத்திடாது. பிரேரணை விவாதத்துக்குவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்கப்படமாட்டாது.

ஆனாலும் இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று, சிறைச்சாலை கட்டமைப்பிலுள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம்.” எனவும் சுமந்திரன் கூறினார்.

அதேவேளை, மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாட்டை மலையக கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles