அமெரிக்காவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகக் கோப்பையை வெல்லும் அசுர பலத்துடன் திகழ்ந்த பிரான்ஸ் அணியின் 3-வது உலகக் கோப்பை கனவை ஸ்பெயின் அணி தகர்த்தெறிந்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில் (Arlington, Texas) நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸின் நட்சத்திர முன்கள வீரர்களைக் கட்டிப்போட்ட ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்து அல்லது அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும்.
ஸ்பெயினின் முதல் கோல் (பெனால்டி)
முதல் பாதியில், ஸ்பெயின் விங்கர் லமைன் யமால் மீது பிரான்ஸ் லெப்ட்-பேக் லூகாஸ் டிக்னே ஆக்ரோஷமாக மோதியதால் ,சால்வடோரன் நடுவர் இவான் பார்டன் பெனால்டி வாய்ப்பை வழங்கினார்.
கிடைத்த வாய்ப்பில் மைக்கேல் ஓயார்சாபல், பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மைனானை ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளினார். இது இந்த உலகக் கோப்பையில் ஓயார்சாபலின் 5-வது கோலாகும்.
இந்தத் தொடரில் பிரான்ஸ் அணி பின்னடைவைச் சந்தித்தது இதுவே முதல் முறை.
பிரான்ஸிற்கு விழுந்த அடுத்தடுத்த அடிகள்
கோல் வாங்கிய சில நிமிடங்களிலேயே, பிரான்ஸின் சென்டர்-பேக் வில்லியம் சலிபாவிற்கு கீழ் முதுகு காயம் மீண்டும் ஏற்பட்டதால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவருக்குப் பதிலாக கிறிஸ்டல் பேலஸ் அணியின் டிஃபென்டர் மேக்சென்ஸ் லாக்ராய்ஸ் களமிறக்கப்பட்டார்.
முதல் பாதியில் பிரான்ஸ் அணியால் இலக்கை நோக்கி (shot on target) ஒருமுறை கூட பந்தை அடிக்க முடியாமல் போனது.
இரண்டாவது கோல்
ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் பிரான்ஸ் பயிற்சியாளர் திதியர் டெஷாம்ப்ஸ் தனது தாக்குதலை வலுப்படுத்த பிராட்லி பார்கோலாவுக்குப் பதிலாக டெசிரே டூயேயைக் களமிறக்கினார்.
ஆனால், அடுத்த நிமிடமே ஸ்பெயின் தனது 2-வது கோலை அடித்து பிரான்ஸிற்கு அதிர்ச்சியளித்தது.
டிபென்டர் பெட்ரோ போரோ, பாக்ஸின் விளிம்பில் இருந்த டானி ஓல்மோவிற்கு பந்தை பாஸ் செய்து, மீண்டும் அவரிடமிருந்து பெற்று மிக லாவகமாக கோலாக மாற்றினார்.
பிரான்ஸ் அணி தியோ ஹெர்னாண்டஸ் மற்றும் ராயன் செர்கி ஆகியோரை மாற்று ஆட்டக்காரர்களாகக் களமிறக்கிய போதிலும், ஸ்பெயினின் பலமான தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை.
கைலியன் எம்பாப்பே, பாலன் டி ஓர் (Ballon d’Or) வென்ற உஸ்மான் டெம்பேலே மற்றும் மைக்கேல் ஒலிசே போன்ற நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தும் பிரான்ஸால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
கடந்த 14 ஆண்டுகளாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் திதியர் டெஷாம்ப்ஸ் இந்த உலகக் கோப்பை தொடருடன் தனது பதவியில் இருந்து விலகுகிறார்.
2018-ல் உலகக் கோப்பை சாம்பியன் மற்றும் 2022-ல் ரன்னர்-அப் பட்டங்களுக்குப் பிறகு, அவரது பயிற்சியின் கீழ் பிரான்ஸ் ஆடும் கடைசிப் போட்டியாக இந்த 3-வது இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) போட்டி அமையவுள்ளது.
