நோர்வூட் பிரதேச செயலகத்தை சேர்ந்த இரு உத்தியோகஸ்தர்கள் ஹட்டன் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்குறித்த இரு அரச உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக நுவரெலியா மாவட்ட செயலகத்துக்குக் கிடைத்த நீண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த விசாரணைகளின் ஒரு கட்டமாக இரு அதிகாரிகளும் தலவாக்கலை மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்கு உடனடி அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்கள்.
விசாரணைக்காக நேற்றைய தினம் நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்த இருவரும் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேற்குறித்த இரு உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் 2.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடிகளில் இருவரும் தொடர்புப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கிறார்கள்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் பலருக்கு எதிராகவும் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், நோர்வூட் பிரதேச செயலாளரால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 32 மற்றும் 30 வயதுடைய இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இரு அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பா. நிரோஸ்










