நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து, மக்களை வழக்குச் சுமைகளில் இருந்து விடுவிப்பதே எமது பிரதான நோக்கமாகும். அண்மையில் நடைபெற்ற இரு தேர்தல்களின்போதும் இதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
இதன் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் மக்களுக்குச் சாதகமான நன்மைகளே கிடைக்கப்பெறும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசமைப்பை இயற்றும் முயற்சிகள் இடம்பெற்றபோதும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறான விடயங்களுக்குச் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்பது குறித்து அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பிற்கு அமைவாகவே உயர்நீதிமன்றமும் இது குறித்த தீர்மானங்களை எடுக்கும்.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளது. மக்களும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர்; ஒரு சிலர் மட்டுமே மாறுபட்ட மனநிலையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.










