தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
உலோக கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 கிலோவுக்கும் அதிகமான எடையுடைய ஹஷீஷ் (Hashish) போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருளை இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சரக்கு ஜூலை 24, 2026 அன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL405 விமானம் மூலம் வந்தடைந்ததுடன், அது ஒரு ‘பரிசுப் பார்சல்’ (Gift shipment) என அடையாளமிடப்பட்டிருந்தது.
ஜூலை 31 அன்று, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் முன்னிலையில் சுங்க அதிகாரிகள் TRICO UPB கிடங்கில் அந்தச் சரக்கைச் பரிசோதித்தனர். இந்தச் சோதனையின் போது, உலோகக் கலன்களுக்குள் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் பொலித்தீன் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இறுதிக் கணிப்பீட்டின்படி, பொதி செய்வதற்கான பொருள் உட்பட 10.608 கிலோ எடையுள்ள கஞ்சா தொடர்பான போதைப்பொருட்களான மரிஜுவானா, ஹஷீஷ் மற்றும் ஹஷீஷ் எண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 106.08 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.










