நோர்வூட்டில் அஸ்வெசும மோசடி : இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரையும் எதிர்வரும் (25) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

அவர்கள் இன்று ஹட்டன் நீதவான் நீதிபதி பீட்டர் பால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பிரிவின் பொறுப்பாளராக இருந்த, ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர் .

இரு சந்தேக நபர்களைக் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து (01) அன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி அவர்களை இன்று (11) வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் சந்தேக நபர்களுக்காக ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்கள், இரு சந்தேக நபர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்க ஒப்புக்கொண்டதால், அவர்கள் பிணை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதில் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நோர்வூட் பிரதேச செயலகத்தில்
அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதி மோசடி தொடர்பில் மோசடி செய்யப்பட்ட பணம் குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும் மேலும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக வந்துள்ள கூடுதல் புகார் குறித்து விசாரித்து வருவதால், சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த ஹட்டன் நீதிபதி பீட்டர் பால் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் , இந்த பயணம் ஏழைகளுக்கு வழங்கும் பணம் என்றும், இதுபோன்ற அரச பணத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குப் பணத்தை மோசடி செய்ய எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.

அதன்படி, நீதிபதி இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவும், இந்த மாதம் மீண்டும் (25) ஆம் திகதி வழக்கினை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

இரு சந்தேக நபர்களின் சகோதரர்களில் ஒருவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரி எனவும் , மேலும் மோசடிப் பணத்தின் ஒரு பகுதி அவரது கணக்கிலும் வரவு வைக்கப்பட்டிருந்தமை கண்டறிந்து அந்த அதிகாரிக்கு எதிராக நடத்தப்படும் விசாரணையின் விளைவாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன், அந்த அதிகாரியின் பணியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கிடையில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் பணம் வரவு வைக்கப்படாத பயனாளிகள், தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க தினமும் நோர்வூட் பிரதேச செயலகத்திற்குச் சென்று வருகின்றனர் . அங்குள்ள அதிகாரிகள், பயனாளிகளின் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெற்று, அது குறித்த தகவல்களை வழங்குவதாகக் கூறி, அந்த பொது மக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

நானுஓயா நிருபர்
.

Related Articles

Latest Articles