சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் கிடைக்கவுள்ளதுடன், கொட்டகலை பிரதேசத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக “வேர்ல்ட் விஷன்” (World Vision) நிறுவனம் பாடசாலை ஒன்றைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளதாகக் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (11) செவ்வாய்க்கிழமை, தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், அண்மையில் மறைந்த கொட்டகலை பௌத்த விகாராதிபதிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், சபை நிகழ்வுகளைப் பார்வையிடுவதற்காகக் டெரிகிளையர் தமிழ் வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்களுடன் வருகை தந்திருந்தனர்.
அமர்வில் தொடர்ந்து உரையாற்றிய தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்ததாவது:
“கடந்த வாரம் கண்டிக்கான இந்திய உதவித் தூதுவர் சரண்யா அவர்களை, எமது சபையின் செயலாளர் விஜயசுந்தரம் மற்றும் உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோருடன் சென்று சந்தித்தோம். இதன்போது, அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறும், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்த சுமார் 700 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள், மடிக்கணினிகள், புலமைப்பரிசில்கள் உட்பட இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் விவசாய ஊக்குவிப்பு உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். இன்னும் மூன்று மாத காலத்திற்குள் இந்த உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகள் கல்வி கற்பதற்கான பாடசாலை ஒன்றைக் கட்டிக் கொடுக்கவும், அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், உணவு, உடை மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு போன்ற செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் “வேர்ல்ட் விஷன்” நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள விசேட தேவையுடைய 88 மாணவர்களுக்கு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா செலவில் உலர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்து, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, கொட்டகலை பொது விளையாட்டு மைதானம் மாதத்தில் 30 நாட்களும் விளையாட்டு நிகழ்வுகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபா கட்டணமும், வைப்புப் பணமாக 10,000 ரூபாவும் அறவிடப்படும். வெளிப்பகுதிகளிலுள்ள கழகங்களுக்குக் கட்டணமாக 15,000 ரூபாவும், வைப்புப் பணமாக 10,000 ரூபாவும் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எமது பிரதேச எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் நிகழ்வுகளுக்கு மைதானம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக மின்சாரம் மற்றும் மலசலக்கூட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
எமது பிரதேச சபைக்குச் சொந்தமான புதிய கட்டடத்தின் வேலைகளை விரைவில் பூர்த்தி செய்வதற்காக, மத்திய மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் செயலாளர்களின் ஒப்புதலையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உறுப்பினர் சுதர்ஷன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வட்டகொடை நகரில் ஏ.டி.எம் (ATM) இயந்திரச் சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் பிரபல வங்கிகளுடன் தொடர்புகொள்ளப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு அவரவர் வட்டாரங்களில் அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவுசெய்து, வரும் நவம்பர் மாத இறுதிக்குள் விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீளச் செல்வதைத் தவிர்க்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
