நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு அங்கமாக, 835 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய டிப்போ வளாகம் இன்று கேகாலையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் புதிய வளாகத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சபரகமுவ பிராந்திய அலுவலகம், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் கேகாலை கிளை ஆகியன உள்ளடங்கியுள்ளன.
மேலும், இதில் கூட்ட அரங்கம் (Auditorium), செயல்பாட்டுப் பிரிவு, நவீன வசதிகளுடன் கூடிய ஊழியர் ஓய்வறை, கணக்கு அலுவலகம் மற்றும் ஏனைய நிர்வாகப் பிரிவு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளை நிறுத்துவதற்கான விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் பெரிய உணவகம் ஆகியவையும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்துகளுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய பேருந்து திருத்தும் பட்டறை (Workshop) ஆகியவையும் இந்த மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.










