சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் சொத்துக்கள் மற்றும் காணிகளை வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் பெண் சந்தேகநபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 14, பெர்குசன் வீதியில் வசிக்கும் பெண் போதைப்பொருள் கடத்தல்காரர்எனவும், போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த பணத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் மா அதிபரால் அந்த முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த விசாரணைப் பிரிவினால் நீதிமன்றத்தில் அறிக்கை செய்யப்பட்ட பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி அந்த சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டன. மேலும், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்களால் இந்த தடைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்ட சொத்துக்களில் பின்வருவன அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்:
ஜா-எல பகுதியில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான 8.66 பேர்ச்சஸ் காணி
06 வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 59 இலட்சம் ரூபா பணம்
கொழும்பு 14 பகுதியில் அமைந்துள்ள 225 இலட்சம் ரூபா பெறுமதியான 03 கடைகள்
கொழும்பு 14 பகுதியில் அமைந்துள்ள 75 இலட்சம் ரூபா பெறுமதியான 01 கடை
கொழும்பு 14 பகுதியில் அமைந்துள்ள 200 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடி வீடு கொண்ட காணி
இதற்கமைய, மேற்கண்ட சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டவை என விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.










