“சிறைச்சாலையைக் காட்டி அச்சுறுத்தினாலும் உண்மைகளைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை. அரசியல் களத்தில் நான் வெளியிடும் கருத்துகள் போலியானவை என எவரேனும் தர்க்கரீதியாக நிரூபித்தால், அரசியலில் இருந்தே விலகுவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“நாட்டிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அது குறித்து எதிரணியில் இருக்கும் சிலர் கருத்துகளை வெளியிடாமல் மௌனம் காப்பது கவலையளிக்கிறது. எனினும், எதிரணியில் உள்ள அனைவரும் அவ்வாறானவர்கள் அல்லர். நமக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முற்பட்டாலும், உண்மையைப் பேசுவதற்கு நாம் அஞ்சப்போவதில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளராக 2016 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் செய்து வருகிறேன். இக்காலகட்டத்தில் போதிய சான்றுகளோ, காரணங்களோ இன்றி நான் பொய்யான தகவல்களைக் கூறியுள்ளேன் என்பதை எவரேனும் நிரூபித்தால், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஓய்வுபெற நான் தயார்.
ஒரு விடயம் குறித்து நான் கருத்து வெளியிடுவதாக இருந்தால், அது தொடர்பாக போதிய தகவல்கள் இருந்தால் மட்டுமே வெளியிடுவேன். இந்நாட்டின் நீதித்துறை மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது; எனவே, எதற்கும் அஞ்சமாட்டேன்” என்று மொட்டு கட்சியின் செயலாளர் குறிப்பிட்டார்.
