மலையக மக்களின் மனோநிலையை அறியாமல் தோட்டங்களின் குத்தகை காலத்தை நீடிக்க அனுமதிக்க கூடாது என்று இதெகாவின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு ,
” பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமானால் குத்தகை காலத்தை நீடித்து தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக அறிகிறோம் . மலையக பெருந்தோட்ட மக்களின் கருத்தறியாமல் குத்தகை காலத்தை நீடிக்க கூடாது.
22 பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை காலம் முடிவடைவதற்கு இன்னும் 19 ஆண்டுகள் இருக்கின்றன. இக் குத்தகை காலத்தை மேலும் 47 வருடங்களுக்கு நீடித்துக் கொள்வதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிகிறது.
பொருந்தோட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற தோட்ட குடியிருப்பார்கள் இந்த நாட்டின் பிரஜைகள். இவர்களின் காணி உரிமை , வீட்டுரிமை உட்பட நியாயமான உரிமை கோரிக்களை நீங்கள் யதார்த்த பூர்வமாக அணுகுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு மலையக மக்களிடம் காணப்படுகிறது.
பெருந்தோட்ட பிரதேச தோட்ட குடியிருப்பாளர்களின் நியாயமான அபிலாசைகளை புறந்தள்ளிவிட்டு குத்தகை நீடிப்பு கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என எதிர்பார்க்கிறோம்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கைக்கு சாதகமாக தற்போது வழங்கப்பட்டுள்ள குத்தகை காலத்தை நீடிப்பதற்கு முனைந்தால் பெருந்தோட்ட பயிற்செய்கை பிரதேசம் மட்டுமல்லாமல் தோட்ட குடியிருப்புகள், குடியிருப்பாளர்களின் காய்கறி தோட்டங்கள், அவர்களின் கால்நடை வளர்ப்புக்கான புத் தரைகள், மக்கள் பாவித்து வருகின்ற கோவில்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சன சமூக நிலையங்கள், மைதானங்கள், பாதைகள் போன்ற பொது இடங்களையும் சேர்த்து இவர்கள் குத்தகைக்கு பெற முயற்சிப்பார்கள். இது மலையக மக்களை மீண்டும் நவீன அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்லும்.
பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழுகின்ற தோட்ட குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் தோட்ட குடியிருப்பு பிரதேசம் உடமையாக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட பயிர் கைச்செய்கைக் காணிகள் சிறு
தோட்ட உரிமையாளர் முறைக்கு மாற்றப்பட வேண்டும். தற்போது தோட்டங்களில் வசிக்கின்ற குடும்பங்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்பட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் மலையகத்தில் பலமாக எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் தோட்டங்களை மீண்டும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வழங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளாது என எதிர்பார்க்கிறோம்.” – என்றுள்ளது.
