மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், அது எதிர்வரும் காலங்களிலும் மக்கள் சக்தியிலேயே தங்கியிருக்கும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நாட்டை வளர்ச்சியடைந்த, சிறந்த நாடாக கட்டியெழுப்புவதில் வேறு எந்த சக்தியையும் விட மக்கள் சக்தி மீது பலமான நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொது மக்கள் மத்தியில் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நீதி வழங்கலை செயற்திறனாக மேற்கொள்வதையே எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான மிக முக்கியமான அடித்தளமான தேசிய ஒற்றுமைக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சர்வதேச ரீதியில் கௌரவமும் அங்கீகாரமும் பெற்ற ஒரு நாடாக இலங்கையை மீண்டும் உயர்த்துவதற்கும், நபி நாயகம் அவர்களின் போதனையான “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதற்கு உயிர் கொடுப்பதற்கும் அரசாங்கம் கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த அரச விழாவை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சும், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களில் பல ஆண்டுகளாக சமயப் பணிகளைச் செய்வதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மௌலவிமார், சமூகத்திற்கு ஆற்றிய சேவையையும் ஜனாதிபதி இதன் போது பாராட்டி கௌரவித்தார்.

மேலும், தேசிய மிலாதுன் நபி விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கினார். 2026 தேசிய மீலாதுன் நபி அரச விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஞாபகார்த்த முத்திரை மற்றும் கடிதஉறை மற்றும் கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான நூல் மற்றும் மீலாதுன் நபி நினைவு மலர் என்பனவும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டன.

விழாவின் போது பிரதேச மக்கள் சார்பாக ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இன்றைய தினம் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமாகும். நமது நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான ஒரு நாளாகும்.

பல ஆண்டுகளாக இலங்கை முழுவதிலும் அவருடைய பிறந்த தினத்தை முன்னிலைப்படுத்தி இந்த மீலாத் நபி விழா நடத்தப்பட்டு வருகிறது.இங்கு வருகை தந்துள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், அவர்களின் பிறந்த தினம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

உலகில் தோன்றிய மதத் தலைவர்களின் பிறந்த தினம், அவர்களால் போதிக்கப்பட்ட போதனைகள், அதேபோன்று அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என்பன, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய சமூகத்தை, அமைதியான, மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டுகின்றன என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் போதிக்கப்பட்ட போதனைகளுக்கு முற்றிலும் மாறாக அநேகமானவர்கள் நடந்து கொள்கின்றனர். அவர்கள் அமைதியைப் போதித்த போது, அதே மார்க்கத்தை அமைதிக்கு எதிராகப் பயன்படுத்துவதையும் அவர்கள் கருணையைக் போதித்த போது, அதே மார்க்கத்தைக் கருணைக்கு பதிலாக வெறுப்பைப் பரப்புவதற்குப் பயன்படுத்துகின்றனர். மதத் தலைவர்கள் மனிதநேயத்தைப் போதித்த போது, அதே மார்க்கத்தை சில சந்தர்ப்பங்களில் மனிதநேயத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதையும் நாம் காண்கிறோம்.

எனவே, ஒவ்வொரு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நமது மதத் தலைவர்கள் மீது, தற்காலத்தில் அந்த மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த மதப் போதனைகளைத் தங்கள் தோள்களில் சுமந்து நிற்கும் நமது பிக்குமார்கள் மற்றும் மதத் தலைவர்கள் மீது மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு மதத் தலைவராலும் போதிக்கப்பட்ட விடயங்களை மீண்டும் இந்தச் சமூகத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

நபிகள் நாயகம் அவர்கள், தம்முடைய முழுமையான போதனைகளின் சாரத்தையும் தமது இறுதிப் பேருரையில் முன்வைத்தார்.மனிதநேயம் பற்றியும், அமைதி பற்றியும், அனைத்து மனிதர்களின் சமத்துவம் பற்றியும், பொருளாதாரம் பற்றியும் என ஐந்து முக்கிய விடயங்களை மையமாகக் கொண்டு அவர் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.

இப்போது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன?நமது மதத் தலைவர்கள் கண்ட அந்தச் சமூகத்தை,அந்த சாதகமான, அமைதியான, அன்பான, மனிதநேயம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாக நமது இலங்கை, நீண்டகால இனவாத மோதல்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு என்பதை நாம் அறிவோம். வடக்கிலும் தெற்கிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி நமது இளம் தலைமுறையினர் இந்த இனவாத மோதல்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்துள்ளனர்.

மிகவும் கொடூரமான, நாசகார அனுபவங்கள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் மீண்டும் எந்தவொரு வகையிலான இனவாதத்திற்கோ, இனவாத மோதல்களுக்கோ இலங்கைக்குள் இடமளிக்கக் கூடாது என்பதேயாகும்.தற்போது வாழும் நாம் அனைவரும், ஏதோ ஒரு வகையில் அந்த இனவாத மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம்.

நடந்த சம்பவங்களை வெறும் நிகழ்வுகளாகவே கடந்து செல்ல நாம் அனுமதிக்கலாம்.ஆனால் அந்த சம்பவங்களிலிருந்து அனுபவங்களைப் பெற்று, அவை மீண்டும் இலங்கைக்குள் நிகழாமல் இருப்பதற்கு அந்த அனுபவங்களை நாம் பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு அரசியல் இயக்கமாகவும், ஓர் அரசாங்கமாகவும் நாம், அந்த நாசகார நிகழ்வுகளை நமது நாட்டில் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான அனுபவங்களாக மாற்றிக் கொள்கிறோம்.
எந்தவொரு வகையிலான இனவாதத்திற்கோ அல்லது மதவாத மோதல்களுக்கோ மீண்டும் இந்த இலங்கையில் இடமளிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நமது அரசு, நமது நாட்டின் அமைவிடம், நமது நாட்டின் மனித வளத்தின் திறமைகள், நமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட நாகரிகம், நமக்குக் கிடைத்திருக்கும் மதிப்புமிக்க இயற்கை வளங்கள், மற்றும் உலகின் எந்தவொரு வளர்ந்த சமூகத்துடனும் தோளோடு தோள் நின்று பணியாற்றக்கூடிய திறமையான மனித வளம் ஆகியவை நம்மிடம் உள்ளன.

ஒரு நாடு முன்னேற்றமடைவதற்கு, அந்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை உரிமையாக்கித் தருவதற்கும் தேவையான காரணிகள் பெருமளவில் நமது நாட்டில் நிறைந்துள்ளன. இருப்பினும், அந்த முன்னேற்றகரமான அரசை அடைவதற்கு நமக்கு இன்னும் இயலாமல் உள்ளது.

அந்த வளர்ச்சியடைந்த அரசை நமது நாட்டிற்குள் கட்டியெழுப்புவதற்குச் சில முக்கியமான அடித்தளங்கள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
அந்த அஸ்திவாரத்தைப் பலப்படுத்தாமல், நம்மால் ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தை உருவாக்க முடியாது.

நீண்ட காலமாக நமது நாட்டில் நிகழ்ந்த மோசமான, நாசகார விடயங்களால் நமது நாட்டின் அஸ்திவாரமும் அடித்தளமும் சீரழிந்து போயுள்ளன.மீண்டும் நமது நாட்டில் ஒரு பலமான அடித்தளத்தையும் பலமான அஸ்திவாரத்தையும் அமைக்கும் பொறுப்பை ஓர் அரசாங்கம் என்ற வகையில் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.அந்தப் பலமான அஸ்திவாரத்தின் அடிப்படை என்ன?

சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலாய் ஆகிய அனைத்து மக்களின் சமத்துவ உரிமைகள் மீது , இனவாதத்தையும் மத தீவிரவாதத்தையும் நிராகரிக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவது நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஓர் அஸ்திவாரமாகும்.அது ஒரு முக்கியமான அஸ்திவாரம்.

நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு, ஒருவரையொருவர் சந்தேகத்துடனும், வெறுப்புடனும், குரோதத்துடனும் செயற்படுவதால் நாடு முன்னேற்றமடையாது. எனவே முதல் அடித்தளத்தின் முதல் தூண் தேசிய நல்லிணக்கமாகும்.

அடுத்த முக்கியமான தூண் என்னவென்றால், இனிமேலும் நம்மால் உலகில் இருந்து தனித்து வாழ முடியாது. உலகின் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு வகையான தொடர்பு, தொழில்நுட்பம், வர்த்தக ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் என உலகின் பல்வேறு நாடுகளுடன் நமக்கு பல்வேறு தொடர்புகள் இருக்கின்றன.

அப்படியானால் நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குக் காரணமான முக்கிய காரணி என்னவென்றால், உலகிற்கு முன்னால் மிகவும் நல்லதொரு பிம்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.உலக நாடுகளின் அங்கீகாரத்திற்கும் மரியாதைக்குரிய நிலைக்குப் பாத்திரமாகும் ஒரு பிம்பத்தை நமது நாட்டைக் குறித்து நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த இரண்டு வருட காலத்தில், இலங்கைக்கு மீண்டும் உலகில் கிடைக்க வேண்டிய மரியாதையையும் மதிப்பையும் ஒன்றுதிரட்டுவதற்குத் தேவையான சர்வதேச அடித்தளத்தை நாம் அமைத்துள்ளோம்.அது நமது நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான அஸ்திவாரமாகும்.ஒவ்வொரு அரசும் உலக நாடுகள் சந்தை நிலவரங்களில் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு மோதல்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும்கூட, மோதல்கள் தீவிரமடையும் ஒரு தருணத்தில், நமது நாடும் மோதலின் ஒரு கட்டத்திற்கு வரும் தருணத்தில், நாம் மிகவும் தைரியமாக முடிவெடுத்து சர்வதேசத்திற்கு முன்னால் மிகவும் மரியாதைக்குரிய ஒரு அரசாங்கமாக இந்த அரசை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளோம். அது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குக் கிடைத்த ஓர் அஸ்திவாரம்.

அடுத்த முக்கியமான விடயம் என்ன?நபிகள் நாயகம் அவர்கள் கூட போதித்துள்ள, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற விடயம் மிக முக்கியமானது.நமது நாட்டில் ஒரு சமூக அபிப்பிராயம் இருந்தது. சட்டம் என்பது மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கே செயல்படுத்தப்படுகிறது, மேல் மட்டத்தில் உள்ள பணக்காரர்களுக்கோ அதிகாரம் படைத்தவர்களுக்கோ சட்டம் செயல்படுத்தப்படுவதில்லை என்றொரு சமூகக் கருத்து இருந்தது.அல்லது சிலர் பின்பற்றும் மதம் அல்லது அவர்களது கலாச்சாரத்தின் மீது சட்டம் செயல்படுத்தப்படுவதில்லை என்றொரு கருத்து இருந்தது. இது உண்மை.

அந்தக் கருத்துக்கள் தானாக உருவாவதில்லை, அதனுடன் தொடர்புள்ள முக்கியமான அனுபவங்கள் இருந்தன.அந்த அனுபவங்களின் அடிப்படையில் சட்டம் என்பது ஏழைகளுக்குத்தானே தவிர, மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு சட்டம் செயல்படுத்தப்படுவதில்லை என்று பொதுமக்கள் நினைத்தார்கள்.அவ்வாறு ஒரு முன்னேற்றகரமான நாட்டை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முக்கியமான அஸ்திவாரத்தின் ஒரு பகுதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நாம் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறோம்.

அவர் பலமானவரா, பலவீனமானவரா, பணக்காரரா, ஏழையா, அவருடைய மதம் என்ன, கலாச்சாரம் என்ன என்ற எந்தப் பாகுபாடுமின்றி, இலங்கை தற்போது ஒரு முன்மாதிரியை உருவாக்கி வருகிறது. மீண்டும் இந்த நாட்டில் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற உத்தரவாதத்தை நாம் இந்த நாட்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறோம்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அது அவசியமானது. அப்படி இல்லாமல் ஓர் அரசை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.அடுத்த முக்கியமான விடயம், நமக்கு ஒரு திறமையான அரச சேவை அவசியமாகும்.நமது நாட்டு மக்களுக்கு நமது நாட்டின் அரசு சேவை குறித்து மிகவும் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை.

சில அதிகாரிகள் குறித்து நல்ல அபிப்பிராயம் இருந்தபோதிலும், பொதுவான அரசு சேவை குறித்து பாதகமான கருத்து நிலவியது.எனவே மக்களுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய, மக்களின் காரியங்களைத் திறம்படச் செய்து கொடுக்கக்கூடிய ஒரு நவீன அரச சேவை நமக்கு அவசியமாகும்.

அதற்குத் தேவையான குறிப்பிடத்தக்க பல நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.இன்னும் ஒரு வருட காலத்திற்குள், அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் அனைத்து முக்கியமான கொடுக்கல் வாங்கல்களையும் வீட்டிலிருந்தபடியே ஒன்லைன் மூலம் செய்யக்கூடிய ஒரு அமைப்பை நமது நாட்டிற்குள் கொண்டுவர நாம் முயற்சி செய்து வருகிறோம்.அது அரசு சேவையின் திறனுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

அதேபோன்று அரச சேவையை நமது நாட்டின் ஒரு கவர்ச்சிகரமான தொழிற்துறையாக மாற்ற வேண்டும்.அதற்காக நாம் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். அடுத்த ஜனவரி மாதத்திலும் சம்பள உயர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த அரசை கட்டியெழுப்புவதில் நமக்கு மிகவும் செயற்திறனான அரச சேவை அவசியமாகும்.

அடுத்த முக்கியமான காரணி என்னவென்றால், நமது சமூகத்தை சிறந்ததொரு சமூகமாக மாற்ற வேண்டும்.நம் எல்லோரையும் பயமுறுத்தும் அரக்கன் நமது கண் முன்னால் நிற்கிறான்.கிராமங்கள், நகரங்கள் எங்கும் அந்த அரக்கன் பரவிக் கொண்டிருக்கிறான். பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் , அரச சேவையின் முக்கிய அதிகாரிகள், பொலிஸின் முக்கிய இடங்கள் என அனைத்தையும் இந்த அரக்கன் விழுங்கிக் கொண்டிருக்கிறான்.

அதன் ஆழத்திற்குச் சென்று நாம் பார்த்தால், நமது நாட்டையும் நமது எதிர்கால சந்ததிகளையும் பற்றி அது ஒரு பாரிய பயங்கரமான அச்சத்தை உருவாக்குகிறது. போதைப்பொருள் சார்ந்த குற்றம் மிகுந்த உலகம் உருவெடுத்துள்ளது.அது எந்தவொரு இடத்திலும் நமக்குக் கௌரவத்தையோ அல்லது பாராட்டுதலையோ மிச்சம் வைக்காமல்,இந்த போதைப்பொருள் பேரழிவு பரவிக் கொண்டிருக்கிறது.அதன் மூலம் திரட்டப்படும் பெருமளவிலான சட்டவிரோதப் பணத்தை தாராளமாகப் பயன்படுத்தி,நமது சட்டபூர்வ அரச கட்டமைப்புகளைத் தம் வசப்படுத்திக் கொண்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்ளம், பொலிஸ் ,சுங்கம் என பல நிறுவனங்கள் இந்த போதைப்பொருள் வலையமைப்பின் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோதப் பணத்தில் சிக்கியுள்ளன. இந்த நிலை இன்னும் ஒரு தசாப்தம் அல்லது இரண்டு தசாப்தம் தொடருமானால், நமது நாட்டின் முழு அரசு கட்டமைப்புமே சீர்குலைந்துவிடும். அந்த ஆபத்தான சூழ்நிலைக்கு முன்னால்தான் நாம் நிற்கிறோம்.

ஓர் அரசாங்கம் என்ற வகையில் நாம் ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம். உறுதியான முறையில் இந்த போதைப்பொருள் அரக்கனையும், அதனுடன் தொடர்புபட்ட ஆயுதம் ஏந்திய சட்டவிரோத அமைப்புகளையும் வேரோடு பிடுங்கி எறிவோம்.அது தற்போது வாழும் நமக்காக மட்டுமன்றி,எதிர்காலத்தில் வரவிருக்கும் நமது பிள்ளைகளுக்காகவும் நாம் செய்ய வேண்டிய ஒன்றாகும். எதிர்காலப் பிள்ளைகளுக்காக நாம் அதைச் செய்தாக வேண்டும்.

அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுடன் நாம் நாள்தோறும் கலந்துரையாடி வருகிறோம்.ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். அது பரவியிருக்கும் விதம், விரிவடைந்துள்ள விதம் மிகவும் பயங்கரமானது.எனவேதான் அதனை அழிக்க வேண்டும்.

இன்று மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய நாளான நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமாகும். அனைத்து போதைப்பொருட்களையும் மதுவையும் நிராகரித்த மதத் தலைவரான நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினம் இது. நமது நாட்டிலிருந்து இந்த போதைப்பொருளையும் அதனுடன் தொடர்புள்ள பாதாள உலகத்தையும் முடிவிற்குக் கொண்டுவருவதற்காகப் பொதுமக்களை ஒன்றிணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இவை வளர்ச்சியடைவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசியல் தலைமைகளின் அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைத்தது.நான் அவற்றைப் பற்றி அதிகமாகப் பேசப் போவதில்லை. என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும், குறிப்பாக நீர்கொழும்பில் உள்ள உங்களுக்கு இது பற்றித் தெரியும்.எனவேதான் ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இதனைத் தோற்கடிக்க வேண்டும்.

அதனால் நமக்கு முன்னால் உள்ள நாட்டை வளர்ச்சியடைந்த ஒரு நாடாக மாற்றுவதற்கும், நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பெரும் சவால்கள் உள்ளன.ஆனால் நாம் அந்தச் சவால்களை எந்தப் பலத்தைக் கொண்டு வெற்றி கொள்ளப் போகிறோம்?அரசிடம் உள்ள முப்படைகளா? ஆம், அதுவும் அதற்கு ஒரு பலம்தான்.அரசிடம் உள்ள பொலிஸா? ஆம், அதுவும் அதற்கு ஒரு பலம்தான்.அரச கட்டமைப்பா ? ஆம், அவையும் அடக்குவதற்கான பலம்தான்.

ஆனால் அந்த அனைத்தையும் விட மேலாக இதனைத் தோற்கடிப்பதற்குத் தேவையான ‘மக்கள் பலத்தைக்’ கட்டியெழுப்புவதே முதன்மையானது.இந்த நாட்டின் மக்களின் மக்கள் பலத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்து நாம் செயற்படுகிறோம்.

நானோ அல்லது எனது அரசாங்கமோ எடுக்கும் எந்தவொரு தீர்மானமும்,எந்தவொரு நடவடிக்கையும் இந்த நாட்டு மக்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் சிறிய அளவிலான சம்பவம் கூட நடக்காதவாறு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எந்தவொரு அநீதியும் நடக்காது.

புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாரியதொரு விவாதத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், நமது நாட்டு மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக இருக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும், நீதி கட்டமைப்பின் மூலம் நமது சமூகத்தைச் சீரமைப்பதற்குமான தேவையை மட்டுமே எமக்கு முழுமையாக இருக்கிறது.அதில் எதுவுமே இந்த நாட்டின் பொதுமக்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் வகையில் அமையாது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். எந்த அநீதியும் ஏற்படாது.

ஆனால், பாதாள உலகத்தை அடக்கும் போது பாதாள உலகத்திற்கு அநீதி இழைக்கப்படலாம்.பொதுமக்களுக்கு நன்மையே நடக்கும்.போதைப்பொருளை ஒழிக்கும் போது போதைப்பொருள் வர்த்தகளுக்கு அநீதி ஏற்படும்.பொதுமக்களுக்கு நன்மைகளும் நல்வாழ்வும் கிடைக்கும்.

அரசியலமைப்புத் திருத்தமும் அதே போன்றதுதான் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இது பொதுமக்களின் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நீதியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வேகத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒன்றாகும்.

நமது நீதி வழங்கும் நிறுவனங்களில் ஒரு பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது. 2006 ஆம் ஆண்டின் வழக்கிற்குத் தீர்ப்பு 2026 ஆம் ஆண்டில்தான் கிடைக்கிறது என்றால்… 2017 ஆம் ஆண்டின் ஒரு வழக்கு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் ஒரு சாட்சியத்தைக் கூடப் பெறவில்லை என்றால், எப்போதுதான் மக்கள் நீதியின் மீது நம்பிக்கை வைப்பார்கள்? அந்த நம்பிக்கை உருவாகப்போவதில்லை. எனவே இந்தச் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக பல நிறுவனங்களைப் பலப்படுத்த வேண்டும்.

நமது குற்றப் புலனாய்வுத் துறை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம்…அதேபோல் நீதிமன்றக் கட்டமைப்பு ஆகிய இவை அனைத்தையும் செயற்திறனுடன் செயல்பட வைத்து, தேவையான சட்டங்களை இயற்றி, சட்டப் பாதுகாப்பையும் செயற்திறனுடன் செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும், மனித வளத்தையும் வழங்குவதன் மூலமே இவற்றை செயற்திறனுள்ளதாக மாற்ற முடியும்.அதற்காக நாம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.அந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் நமது அரசாங்கம் நம்பிக்கை வைப்பது இந்த நாட்டின் மக்கள் பலத்தின் மீதே ஆகும்.

யார் எந்த வகையில் சிறிய சிறிய எதிர்ப்புகளைக் காட்டினாலும்,மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் பின்னோக்கிப் பெறப்பட மாட்டாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன். பின்வாங்கப் போவதில்லை.

ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது வரக்கூடிய நன்மைகள், தீமைகள்,ஏனைய புறக் காரணிகள் என அனைத்தையும் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாகவே ஆராய்வோம்.ஆனால் தீர்மானம் எடுத்த பிறகு,பின்னோக்கிப் போவதில்லை என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.அது நமது நாட்டிற்கு அவசியமானது.

அதேபோல் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை மாற்றுவதற்கும் நாம் எந்த வகையிலும் தயங்கப் போவதில்லை. எப்போதும் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசாங்கம் இது.

நபிகள் நாயகம் அவர்களின் இந்த பிறந்த நாளில், அவரது போதனைகள் மற்றும் இறுதி உரையின் அர்த்தத்தையும், அதிலுள்ள அமைதி பற்றிய எதிர்பார்ப்பையும்,அதில் இருந்த மனிதநேயம் பற்றிய நம்பிக்கையையும்,அதில் இருந்த பொருளாதாரம் மற்றும் வறுமை பற்றிய பார்வையையும் இவை அனைத்தையும் யதார்த்தமாக்குவதற்குத் தேவையான ஒரு ஆட்சியை நாம் இணைந்து உருவாக்கியுள்ளோம்.

இத்தகைய ஆட்சி உங்களது ஆதரவுடனும் உங்களது பலத்துடனும் தொடர்ந்து நிலைத்திருக்கும் எனக்கூறி விடைபெறுகிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles