தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பார் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய வாடிக்கையாளரான பெண்ணுக்கு பார் ஊழியர் ஒருவர் கேமரா முன்னிலையில் மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் போஸ்ட் (New York Post) அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 25 அன்று பிங்க்லாவோ (Pinklao) பகுதியில் உள்ள பிரபல பார் ஒன்றிற்கு 18 வயது இளம் பெண் ஒருவர் போலியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி நுழைந்துள்ளார்.
அங்கு உணவும் மதுவும் அருந்திய அவருக்கு 60,000 தாய் பாட் (சுமார் 1,800 அமெரிக்க டாலர்) கட்டணமாக வந்துள்ளது.
எனினும், அந்தப் பெண் பணத்தை வசூலிக்காமல் தப்பிச் செல்ல முயன்றதை உணர்ந்த ஊழியர்கள் அவரைச் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகாரளிப்பதற்குப் பதிலாக, பார் ஊழியர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.
கட்டணப் பாக்கியில் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக, முடி விற்பனை ஒப்பந்தம் ஒன்றிற்கு ஒப்புக்கொள்ளுமாறு அந்த இளம் பெண்ணை ஊழியர்கள் நிர்பந்தித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற ஆடையில் இருக்கும் அந்தப் பெண், முறைசாரா “முடி விற்பனை ஒப்பந்தத்திற்கு” ஒப்புக்கொள்வது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
கேமராவிற்குப் பின்னால் இருக்கும் நபர் ஒருவர், “நான் உங்களை ஏமாற்றவில்லை. இதுதான் சந்தை விலை. இதற்கான தொகையைக் கழித்துக் கொள்கிறேன். கூடுதலாகவும் சில தொகையைச் சேர்க்கிறேன், சரியா?” என்று பேசுவது கேட்கிறது.
தொடர்ந்து, பார் ஊழியர் ஒருவர் எலெக்ட்ரிக் ஷேவரைப் பயன்படுத்தி, தோள்பட்டை வரை இருந்த அப்பெண்ணின் நீண்ட தலைமுடியை முழுமையாக மொட்டையடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த முடி விற்பனை செய்யப்படவோ அல்லது தானமாக வழங்கப்படவோ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு தாய்லாந்தின் சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வதை விட அப்பெண் எளிதாகத் தப்பித்துவிட்டார் எனச் சிலர் வாதிட்டாலும், பார் நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான சட்ட விரோத நடவடிக்கையைச் சட்ட வல்லுநர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.










