ஈரான் வரைபடத்தில் தனது முகத்தைப் பதிவிட்டு, புதிய ஏஐ புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அதில் ஈரானின் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் கடந்த 6-ம் திகதி ஏவுகணைகளை வீசி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இந்தச் சூழலில் ட்ரம்ப், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில், ஈரான் வரைபடத்தில் ட்ரம்பின் முகம் பதிவிடப்பட்டு உள்ளது.
மற்றொரு ஏஐ புகைப்படத்தில் அமெரிக்க போர் விமானம், ஈரானின் கார்க் தீவு மீது குண்டுகளை வீசி தகர்க்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. அதோடு அவர் வெளியிட்ட பதிவில், ‘பை, பை கார்க்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் வீழ்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதி என்று குறிப்பிட்டு மற்றொரு புகைப்படத்தையும் ட்ரம்ப் வெளியிட்டு இருக்கிறார். ஈரான் கரன்சி அழிக்கப்பட்டு விட்டது என்றும், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முழுமையாக முடங்கியிருக்கிறது என்றும் அதிபர் ட்ரம்ப் புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்கா, ஈரான் போருக்கு முன்பாக ஹார்முஸ் ஜலந்தி வழியாக நாள்தோறும் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெற்றது.
தற்போது ஈரானின் தலையீடு இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தினமும் 1.80 கோடி பேரல் கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது என்று அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார்.










