கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில் நடைபெறுகிறது
50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு “கொழும்பு மாரத்தான் – 2026” (Colombo Marathon – 2026) சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டி வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் அது தொடர்பான ஏனைய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.
முழு மாரத்தான் (Full Marathon), அரை மாரத்தான் (Half Marathon), 10 கி.மீ ஓட்டம் மற்றும் 5 கி.மீ ‘ஃபன் ரன்’ (Fun Run) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ள இப்போட்டியில் பெருமளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச வீராங்கனைகளும் வீரர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டிக்காக முன்மொழியப்பட்டுள்ள பாதைகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்துள்ளது.










