ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், பொய்களைக் கூறி ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான முதல் பீரங்கி வேட்டாக இக்கூட்டம் அமையும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மக்களுக்குப் போலி வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம், இரண்டு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.
இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலும், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலுமே அநுராதபுரத்தில் பிரமாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இன்று நாட்டில் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் முதன்மைப்படுத்தப்படும்.
தற்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; புதிய அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை.
எனவே, நாட்டை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக, அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மக்கள் பெருந்திரளாக அணிதிரள வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
